மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்துடன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து அழைத்து வரும்போது, மற்றொரு மணல் கடத்தல்குழு வீதியை மறித்து, கைது செய்யப்பட்ட நபரையும், டிப்பர் வாகனத்தையும் கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கிளிநொச்சி பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பொலிசாரின் பிடியிலிருந்தவரையும், வாகனத்தையும் வலுக்கட்டாயமாக விடுவித்த குழுவொன்றைக் கண்டறிய கிளிநொச்சி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி அக்கராயன் வீதியிலுள்ள காப்புக்காடு பகுதியில் மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து கிளிநொச்சி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த புதன்கிழமை (21) காலை சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
பொலிஸ் குழுவினர் காப்புக்காட்டுக்குள் பிரவேசித்த போதும், காப்புக்காட்டுக்குள் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று இருந்ததையடுத்து, மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிப்பர் வாகனத்துடன் சாரதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கும் போதே மற்றுமொரு டிப்பர் வாகனத்துடன் வீதியை மறித்த சிலர் சந்தேக நபரை மணல் லொறியுடன் அழைத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
அப்போது, பொலிசார் சிவில் உடையில் இருந்ததால், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தான் பொலிஸ் என கூறி, வீதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் அடையாள அட்டையை காட்டினார்.
அங்கு, பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாள அட்டை மற்றும் அவரது கையிலிருந்த கையடக்கத் தொலைபேசி என்பன தூக்கி எறியப்பட்டு, சந்தேக நபருடன் டிப்பர் வாகனத்தையும் ஆறு பேர் கொண்ட குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.
பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி காவல்துறையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.