ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில், முஸ்லிம் வர்த்தகர்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் கடைகள் திறக்காத நிலையில், இன்று (23) சிறுகுழுவொன்று கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக பதாதைகளை தொங்கவிட்டு, கருப்புக் கொடி கட்டியது.
அத்துடன், மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவிலும் சிறு கும்பல் கூடியது.
இந்த போராட்டத்தில் பின்னணியில் பாதுகாப்பு தரப்பு செயற்பட்டதாகவும், முன்னாள் இராணுவத் துணைப்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களே இதில் பங்கேற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையென்பதை கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவும் அண்மையில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இந்த பின்னணியிலேயே, மட்டக்களப்பில் சிறு குழு களமிறக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட பின்னர், கருப்புக்கொடி கட்டியவர்கள், கதவடைப்பு பதாதைகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கல்குடா மக்கள் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கும்பல் காட்சிப்படுத்திய பதாதைகளில் இலங்கை ஒரு இறைமை கொண்ட நாடு இந்த விசயத்தை கனேடிய அரசு புரிந்து கொள்ள வேண்டும், கனடா உங்கள் சொந்த தொழிலை கவனியுங்கள் நிம்மதியாக வாழ இலங்கையரை விடுங்கள், உள்ளே விளையாட வேண்டாம், கனடிய அரசாங்கமே இலங்கையர்களை நிம்மதியாக வாழ அனுமதி என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் ஆர்ப்பாட்டமென்ற பெயரில் ஒன்றுகூடினர். இதில் இராணுவப் பின்னணியில் இயங்கிய துணைப்படை உறுப்பினர்களையும் காண முடிந்ததாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத.
இந்த கும்பலை வீதியால் பயணித்த மக்கள் திட்டிக்கொண்டு சென்றதை அவதானிக்க முடிந்தது.