உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் இன்று நடந்த ஆட்டங்களில் மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஒக்டோபர் முதல் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கான அணிகள், தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
சிம்பாவேயின் ஹராரே விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள்- நேபாளம் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நேபாளம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை பெற்றது.
ஷாய் ஹோப் 132, நிக்கோலஸ் பூரான் 115 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் லலித் ராஜ்வன்ஷி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடிய நேபாளம் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.
ஆரிப் ஷேக் 63 ஓட்டங்களை பெற்றார்.
மேற்கிந்தியத்தீவுகள் 101 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஆட்டநாயகன் ஷாய் ஹோப்
அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து
தகுதிச்சுற்றில் மற்றொரு ஆட்டத்தில் ஹராரேயில் அமெரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வென்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றது. ஷயான் ஜஹாங்கிர் 71 ஓட்டங்களை பெற்றார்.
இலக்கை விரட்டிய நெதர்லாந்து 43.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 214 ஓட்டங்களை பெற்று, 5 விக்கெட்டால் வெற்றியீட்டியது.
ஸ்கொட் எட்வர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 67ஓட்டங்களை பெற்றார். ஆட்டநாயகன் அவர்தான்.