முல்லைத்தீவு குருந்தூமலை விகாரையை சுற்றியுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குருந்தூர் விகாரையை சூழவுள்ள காணிகள் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்குச் சென்றால், அப்பிரதேசம் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆபத்தான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அக்கடிதத்தில் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் விகாரைக்கு சொந்தமானத காணி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிவதாகவும், பல்வேறு பௌத்த விஹாரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் இந்த காணிகளை பொதுமக்களிடம் பகிர்ந்தளிப்பது முறையல்ல எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பௌத்த விஹாரைக்கு அருகில் இனவாத போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு காணிகளை வழங்குவது பொருத்தமானதல்ல எனவும் இதன் மூலம் பௌத்த எச்சங்களுக்கு அருகில் இனவாதிகளுக்கு குடியேற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் காணிகளை வழங்கியிருந்தாலும், வழங்காவிட்டாலும் பலாத்காரமாக காணி அபகரிக்கப்பட்டதாகத் தோன்றுவதுடன், அது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், இந்தக் காணிகளின் உரிமையை மாற்றக் கூடாது என மேதானந்த தேரர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டிடமொன்று அமைந்திருப்பதும், அதை சுற்றியுள்ள 229 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் முறையற்ற விதத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொல்பொருள் திணைக்களம் இனவாத அடிப்படையில் செயற்படுவதாக பரவலான முறைப்பாடுகள் எழுந்திருந்தன. பௌத்த பிக்குகள் மற்றும் தனவந்தர்களின் நிதியில் வடக்கு கிழக்கில் விகாரை அமைக்கப்படுவதும் அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் அம்பலமானது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரின் முறையற்ற நடவடிக்கைகளிற்கு சூடு வைத்தார். தெற்கில் முக்கியமான 3 பௌத்த விகாரைகள் அமைந்துள்ள காணிகளை விட மிகப்பெரிய பரப்பில் குருந்தூரில் காணி அபகரிப்பு மேற்கொண்டதை கண்டித்திருந்தார்.