நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொலிசாரால் முறையற்ற விதமாக கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்றும் (9) நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவிக்கையில்,
நேற்று நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் அனைவரும், கஜேந்திரகுமார் எம்.பி கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்பதை சபாநாயகரிடம் கூட்டிக்காட்டினோம். அவர் நாடாளுமன்றம் வரும் வழியில் கைது செய்வது அவரது சிறப்புரிமையை மீறுவதாகும். அவர் என்ன கொலையா செய்தார். 8ஆம் திகதி வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்து விட்டு, அவர் நாடாளுமன்றம் வருவதை தடுத்தது தவறானது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் நேற்று இங்கு பொலிசாரை பாதுகாக்கும் விதமாக பேசினார். அவர் அப்படித்தான் கதைக்கலாம். ஊடகங்களிற்கும் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் நடந்தது தவறான விடயம். இந்த தவறை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம். எமது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
இதையடுத்து பேசிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்-
நான் தெளிவான கூற்றை நேற்று முனவைத்தேன். நான் பாராளுமன்றத்தில்தான் பேசினேன். அதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கலாம்.
நடந்தது இதுதான். வாக்குமூலம் வழங்க வருமாறு 5ஆம் திகதி அறிவிக்கப்பட்டது, 12ஆம் திகதி வருவதாக அவர் கூறினார். 6ஆம் திகதிகொள்ளுப்பிட்டி பொலிசார் ஒரு செய்தி அனுப்பினார்கள். 8ஆம் திகதி முன்னிலையாகி வாக்குமூலமளிக்குமாறு. அவர் தமிழ் மொழியில் இல்லையென குறிப்பிட்டு அதை ஏற்கவில்லை. பின்னர் பொலிஸ் அணியொன்று அவரது வீட்டுக்கு சென்ற போது, காவலாளி வீட்டில் யாருமில்லையென்றார்.
ஆகவே நீங்கள் குறிப்பிட்டதை போல 8ஆம் திகதி வருமாறு அவருக்கு எந்த செய்தியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர் அதை ஏற்கவில்லை. இதையடுத்தே ஒரு பொலிஸ் அணி அவரை கைது செய்தது என்றார். அவர் பாராளுமன்றம் வரும் வழியில் கைது செய்யப்படவில்லை.
இதன்போது எழுந்து கருத்த தெரிவித்த ரவூப் ஹக்கீம்-
இது ஒரு ஊடக கண்காட்சியாகத்தான் நடத்தப்பட்டது. அங்கு ஊடகவியலாளர்கள் இருந்தார்கள். நாங்கள் அதை வீடியோவில் பார்த்தோம். கஜேந்திரகுமார் சபாநாயகருடன் பேசியதை கேட்டோம். அவர் பாராளுமன்றம் வரும் வழியில்தான் கைது செய்யப்பட்டார். அவர் பாராளுமன்றம் வரும் வழியிலுள்ளதாக சபாநாயகரிடம் கூறுவது கேட்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பற்றி பொலிசாரும், பொலிஸ்மா அதிபரும் அறிந்திருக்க வேண்டும். கஜேந்திரகுமார் சம்பவத்தை தெளிவுபடுத்த பாராளுமன்றம்வருவதை தடுக்கவும் கைது நடந்திருக்கலாம் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எரான் விக்ரமரத்தின கருத்து தெரிவிக்கையில்-
நேற்று பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கடந்த காலத்தில் பல உறுப்பினர்கள் முறையற்ற விதமாக கைது செய்யப்பட்டிருந்ததாக கூறினார். இது கவலையளிக்கும் விடயம்.
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அது பற்றி பொலிசாருக்கு அறிவுறுத்த வேண்டும். சபாநாயகரின் அங்கீகாரம் பெற்றே கைது செய்யப்பட வேண்டும் என்றார்.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர்-
சபாநாயகரிடம் அறிவித்தா, அங்கீகாரம் பெற்றா கைது செய்ய வேண்டுமென நிலையியல் கட்டளை குறிப்பிடுகிறது?
எரான் விக்ரமரத்தின- சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும், நிலையியல் கட்டளை உள்ளது. இதேபோல மரபும் உள்ளது. அதையே குறிப்பிடுகிறேன். அங்கீகாரம் பெற்றே கைது செய்ய வேண்டும் என்றார்.