தனது பதினொரு வயது மகளை இரண்டு வருடங்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட தந்தைக்கு 8 குற்றச்சாட்டுகளுக்காக 120 வருட சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி திரு.ரங்க திஸாநாயக்க நேற்று முன்தினம் (05) உத்தரவிட்டார்.
அத்துடன், ஆறு இலட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் எண்பதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உரகஸ்மன்ஹந்திய கோரக்கீன பிரதேசத்தில் வசிக்கும் நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஜனவரி 1ஆம் திகதிக்கும் 2010 ஜனவரி 25ஆம் திகதிக்கும் இடையில், அவ்வப்போது தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் போது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மகள், அயல் வீட்டு பெண்ணிடம் கூறியதை அடுத்து, ஊர்கஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு தகவல் அளித்து தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல் வழக்கில் அவர் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதினைந்து ஆண்டுகள் வீதம் நாற்பத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பத்தாயிரம் ரூபாய் வீதம், முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதை செலுத்த தவறினால் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களில் மகளுக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இரண்டாவது வழக்கில் அவர் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகள் வீதம், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டறது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10,000 ரூபாய் வீதம், 20,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அதைச் செலுத்தாவிட்டால், ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அவர் அதை செலுத்தவில்லை என்றால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்றாவது வழக்கில் அவர் மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதினைந்து ஆண்டுகள் வீதம் நாற்பத்தைந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10,000 ரூபாய் வீதம், 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுக்களிலும் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும், செலுத்தவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.




