வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய திருவிழாவில் பறவைக் காவடியெடுத்தவர், பொலிஸ் வாகனத்தில் மோதி சேதம் ஏற்படுத்தினார் என குறிப்பிட்டு, காவடியெடுத்து வந்த உழவு இயந்திர சாரதி மீது பொலிசார் சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பொலிசாரின் நடவடிக்கைக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்ததால் அங்கு பரபரப்பான நிலைமையேற்பட்டது.
வற்றாப்பளை அம்மன் ஆலய உள்வீதியில் இன்று (5) காலை இந்த சம்பவம் நடந்தது.
வற்றாப்பளை அம்மன் ஆலய திருவிழாவையொட்டி ஏராளமானவர்கள் நேர்த்திக்கடன்களை தீர்க்க காவடி எடுத்து வருகிறார்கள்.
இன்றும், உழவு இயந்திரத்தில் ஒருவர் பறவைக்காவடி எடுத்து வந்தார்.
ஆலயத்திற்கு செல்லும் உள்வீதியில் பறவைக்காவடி சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனம் திடீரென நின்றது. இதன்போது பறவைக்காவடி ஆடி வந்தவர், மேலிருந்து கீழ் நோக்கி வந்த போது, பொலிஸ் ஜீப்பின் பின்னாலுள்ள பாதுகாப்பு பகுதியில் மோதினார். இதனால் ஜீப்பின் பாதுகாப்பு பகுதி வளைந்து சேதமடைந்தது.
ஜீப்பிலிருந்த பொலிசார் உடனடியாக உழவு இயந்திரத்தை நிறுத்தினர். இதனால் அங்கு சர்ச்சை தோன்றியது. பின்னர், காவடியை ஏற்றிய உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதற்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆலய உள்வீதியில் பொலிஸ் வாகனம் எதற்காக அடிக்கடி பயணிக்கிறது, காவடியின் முன்பாக பொலிஸ் வாகனத்தை திடீரென நிறுத்தினால் காவடி ஆடுபவர் எப்படி தன்னை கட்டுப்படுத்துவது என கேள்வியெழுப்பினர்.
போக்குவரத்து விதிகளின்படி பின்னால் சென்று விபத்தையேற்படுத்தும் சாரதியே குற்றவாளியாவார்.
-முல்லைத்தீவு நிருபர் அம்ருதா-