தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிசார் அறிவித்தல் விடுத்துள்ள போதும், அவர் திங்கள்கிழமை வரை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக மாட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தன.
மருதங்கேணியில் விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல் நடத்திய போது, சிவில் உடையில் வந்த பொலிசார் “தொழில் நேர்த்தி“யற்ற விதமாக செயற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
மற்றொருவர் கைது செய்யப்பட்டு தற்போது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிசார் இன்று மாலையில் அறிவித்தனர்.
பொலிசார் இந்த அறிவித்தலை விடுத்த போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாளைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் முறிகண்டிக்கு அண்மையாக பயணித்துக் கொண்டிருந்த போது இந்த அறிவித்தல் வந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கஜேந்திரகுமார் கொண்டு சென்றார். சபாநாயகர் தற்போது நாட்டுக்கு வெளியில் உள்ளதால், பிரதி சபாநாயகர் தொலைபேசியில் கஜேந்திரகுமாருடன் பேசினார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அழைப்பு விடுத்துள்ளதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கள்கிழமை பாராளுமன்றத்திலிருந்து திரும்பி வரும்போதே மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக முடியுமென்பதை கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
முன்னைய செய்தி: கஜேந்திரகுமார் கைது செய்யப்படுகிறார்: பொலிஸ் நிலையம் அழைப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் கைது செய்யப்படவுள்ளார் என்றும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் பொலிசார் அவருக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயம் குறித்து தற்போது சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.