ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அச்சு இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த இளைஞன், இயந்திரத்தில் தலை சிக்கி நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வஸ்கடுவ பொக்குணாவத்தை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மித்தெனிய, கட்டுவன, மொரகலகொட, கோபியாவத்தை பகுதியைச் சேர்ந்த சோலங்க ஆராச்சிகே சாமர உதயங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
அச்சு இயந்திரத்தை சுத்தம் செய்ய இயந்திரத்திற்குள் தலையை இலேசாக உள்நுழைக்க வேண்டும் என்றும், இறந்த நபர் அதிகாலை 3 மணியளவில் இயந்திரத்தில் உள்ள நூல் துண்டுகளை சுத்தம் செய்யச் சென்றபோது, மற்றொருவர் தவறான சுவிட்சை இயக்கியதாகவும் ஆடைத் தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயந்திரத்தின் அச்சிடும் பகுதி கீழே இறங்கிய போது இளைஞனின் தலை சிக்கிக் கொண்டது, உடனடியாக இயந்திரத்தை அணைத்து, வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை ஊழியர்கள் எடுத்தனர். படுகாயமடைந்த இளைஞனை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.