சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த தலையில்லாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலையில்லாத பெண்ணின் சடலத்தை,. டாட்டூ மூலம் அடையாளம் காண்டுள்ளனர்.
மும்பை மீராபயந்தர் பகுதியிலுள்ள உத்தன் கடற்கரையில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அந்த சூட்கேஸ் குறித்து காலையில் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு வந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த சூட்கேஸை திறந்து பார்த்த போது, உள்ளே தலையில்லாத பெண் ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் உடல் இரண்டு பகுதியாக வெட்டப்பட்டிருந்தது. அவரின் தலை சூட்கேசில் இல்லை.
அப்பெண்ணின் உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அப்பெண்ணின் கையில் திரிசூலம், ஓம் போன்றவை டாட்டூவாக வரையப்பட்டு இருந்தது. கையில் கயிறு ஒன்றை கட்டி இருந்தார். அதோடு அவர் சிவப்பு கலர் டி சர்ட் அணிந்திருந்தார். அப்பெண்ணின் கால் கட்டப்பட்டிருந்தது. அப்பெண் யார் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கான விசாரணையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.
உடல் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதா அல்லது சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டு, கடலில் வீசப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் 15- 20 டாட்டூ குத்தும் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் விசாரணை நடத்தி, பெண்ணின் கையில் திரிசூலம் மற்றும் ஓம் அடையாளங்களை பச்சை குத்தியவர் அடையாளம் கண்டுள்ளார். அவரிடம் இருந்து கிடைத்த துப்புகளின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அஞ்சலி மின்டு சிங் (23) என அடையாளம் கண்டனர்.
அவர் நைகாவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. உடனே போலீஸார் அப்பெண்ணின் கணவர் மின்டு ராம்பிரிஜ் சிங் (31), மற்றும் அவரது சகோதரர் சுன் சுன் ராம்பிரிஜ் சிங் (35) ஆகியோரை கைதுசெய்தனர்.
அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அஞ்சலி சிங்கை கொலை செய்து மூன்று துண்டுகளாக வெட்டி சூட்கேசில் வைத்து அடைத்து கடலில் போட்டிருக்கின்றனர்.
அஞ்சலியின் நடத்தையை சந்தேகப்பட்டதால் கொலை செய்ததாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர். மே 24ஆம் திகதி அஞ்சலியைக் கொன்ற சகோதரர்கள் இருவரும் தலையை துண்டித்து, உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீசினர். இந்த பை வெள்ளிக்கிழமை உட்டானில் கரை ஒதுங்கியது.
அஞ்சலியின் உடலை கடலில் வீசிவிட்டு, ஒன்றரை வயது குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு கணவர் ஹைதராபாத் சென்று அங்கிருந்து பீகாரில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்றார். அவர் கிராமத்திலிருந்து தனது மனைவியின் நகைகளை எடுக்க மும்பைக்கு வந்திருந்தார், அப்போது அவரது மனைவியின் சடலம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கிடைத்த துப்புகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தப்பிப்பதற்கு முன்பு தாதர் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இதுவரை பெண்ணின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மீட்கப்படவில்லை. தற்போது, குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.