ஜனாதிபதியை நியமித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அரசாங்கம் புறக்கணித்தால் முன்னோக்கி செல்ல முடியாது என முன்னாள் அமைச்சர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகமடுலு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். .
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
“இந்த ஜனாதிபதி, அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுன காட்டிய அர்ப்பணிப்பை நான் இங்கு குறிப்பிட தேவையில்லை. அது முழு நாட்டுக்கும் தெரியும். ஆனால் இன்று இந்த அர்ப்பணிப்பை சிலர் மறந்துவிட்டனர். எங்கள் முன்மொழிவுகள் எங்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் அரசு தனது இருப்பை இழக்க நேரிடும். அதையும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என விமலவீர திஸாநாயக்க இங்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, “வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களில் அம்பாறையில் மட்டுமே பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது. அங்கு ஒவ்வொரு வீடுவீடாக சென்று கட்சியை வெற்றிபெற வைத்தேன். அப்படி உழைத்து எனது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது. கட்சிக்காக உழைத்த நாங்கள் இன்று பாராளுமன்றத்தில் கைப்பொம்மைகளாக இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்களை போல பாராளுமன்றத்தில் கைகட்டி செயற்பட முடியாது. நாங்கள் சொல்வதைக் காதில் வாங்காத திமிர்பிடித்த அமைச்சர்களும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். அவ்வாறானவர்களுடன் எவ்வாறு பயணிப்பது பொதுஜன பெரமுனவின் தனித்துவம், கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும். கட்சியின் கொள்கை என்னவென்பது எனக்கு தெரியும்.அதை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்புரிமை, கட்சி உறுப்புரிமையை இழக்கவும் தயார்“ என்றார்.