கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மீராவோடை வாராந்த பொது சந்தையானது மீண்டும் இன்று (31) மக்களின் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது பெருமளவான மக்கள் வருகை தந்து தமது நாளாந்த தேவைக்குரிய பொருட்க்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தினர்கள்.
நீண்டகாலமாக கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட செம்மன் ஓடை வாராந்த சந்தை மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தைகளுக்கிடையில் இடம்பெற்று வந்த பிணக்கிற்கு இன்று நல்லமுறையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக சிக்கல் நிலைமைகளை முறியடித்து சந்தை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சந்தை செயற்பட வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர். சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசிர் அகமட் அவர்களிடம் பிரதேச மக்கள் மற்றும் மீரா ஜிம்மா பள்ளி வாயல் நிர்வாகத்தினரும் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தையானது கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நாளாந்த பொதுச் சந்தையாக செயற்பட்டு வந்தது.
கடந்த காலத்தில் ஓட்டமாவடி,வாழைச்சேனை,கிண்ணையடி,முருக்கன் தீவு,அக்குறானை, போன்ற தூர வயல் பிரதேச மக்களும் வருகை தந்து குறித்த பொதுச் சந்தையில் பயன்பெற்றனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக சந்தையின் செயற்பாடுகள் இயங்க முடியாத சூழ் நிலை காணப்பட்டது.
இதன்போது இச் சந்தையினை மீராவோடை மீரா ஜிம்மா பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பொறுப்பேற்று நடாத்தி வந்திருந்தனர்.
பின்னர் 2018 இல் சந்தையினை வாராந்த சந்தையாக நடாத்துவதற்கான முயற்சியினை பள்ளி வாயல் நிர்வாகம் மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான நிலையில் துரதிஷ்ட வசமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஓட்டமாவடி வர்த்தகர்கள் சிலரால் சந்தை நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு கோரி பிரதேச சபையிடம் முறைப்பாடொன்றினை தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய பிரதேச சபையானது தங்களிடமிருந்து வாராந்த சந்தை நடாத்துவதற்கு முறையான அனுமதியினை பெறவில்லை என்ற காரணத்தினை குறிப்பிட்டு சந்தை நடவடிக்கையை இடை நிறுத்துமாறு மீராவேடை மீரா ஜிம்மா பள்ளிவாயலுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.
இதேவேளை தொடர்ந்து சந்தை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வந்ததன் காரணத்தால் நீதி மன்ற நடவடிக்கைக்காக பிரதேச சபையானது பள்ளி வாயல் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்னறத்தினால் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இரு சாராருக்கும் வழக்கு தொடர்ந்து 4 வருடங்கள் வரை இடம்பெற்று வந்தது.
இவ்வாறான நிலையில் இடைப்பட்ட 4 வருட காலப்பகுதிக்குள் குறித்த சந்தையின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்படக் கூடாததென்ற நல்லெண்ண நிலைப்பாட்டில் பிரதேச நலன் கருதி நலன் விரும்பிகளால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட செம்மன் ஓடை பிரதேசத்தில் தற்காலிமாக சந்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் 2022 இல் நீதி மன்றம் சந்தை நடாத்துவதற்கான தீர்ப்பினை பள்ளி வாயல் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தது.
மனிதாபிமான முறையில் மீரா ஜிம்மா பள்ளிவாயலால் வழங்கப்பட்ட செம்மன் ஓடை வாராந்த சந்தையினை மீண்டும் மீராவோடைக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது அதனை நடாத்தி வந்த தனி நபர் ஒருவர் அதனை தர மறுத்த காரணத்தால் முரண்பாட்டு நிலமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையின் போது நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரம் மீராவோடை மீரா ஜிம்மா பள்ளி வாயல் நிர்வாகத்தினால் சந்தையினை தொடர்ந்து நடாத்துவதில் இழுபறி நிலை காணப்பட்டது.
பின்னர் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசிர்அகமட் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை சபையுடன் முறையாக மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் வழமைபோன்று புதன் கிழமை வார நாட்களில் மீராவோடையில் சந்தை நடாத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
செம்மன் ஓடை சந்தையானது புதன் கிழமை தவீர்ந்த ஏனைய நாட்க்களில் கோறளைப்பற்று எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரிதொரு தினங்களில் நடாத்துதல் என்றும் மேலும் எம்.பி.சி.எஸ்.எல்லை வீதியில் இருந்து இரு பக்கமும் 500 மீற்றர் சூனியப் பிரதேச மாக அடையாளப்படுத்தி சந்தை நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் இரு சாராருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதமமுகாமைத்துவ சேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.எம்,நௌபர்,பள்ளி வாயல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார்,முன்னள் பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்.சுற்றாடல் துறை அமைச்சரின் மீராவோடை மேற்கு வட்டார அமைப்பாளர் அலி அன்சார் மற்றும் ஊர் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமைக்கு மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
-க.ருத்திரன்-