சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்திற்கு பிறகு நடிகை சுனைனா நடிப்பில் வெளியான உள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் முழுவதுமே நிரம்பியிருக்கிறார் சுனைனா. க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை கணிக்க முடியாதபடி காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. ‘ரெஜினா’ கதாபாத்திரத்தை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக படம் உருவாகியிருக்கும் எனத் தெரிகிறது. டீசரின் தொடக்கத்தில் வங்கி கொள்ளை ஒன்றும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பான த்ரில்லர் கதையான ‘ரெஜினா’ திரைக்கு வரும் திகதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.