“பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிஎஸ்கேவில் வெற்றிக்கான ரன் அடித்தது ஒரு பாஜக காரியகர்த்தா. ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா, அவர் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். அவர் ஒரு குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தது குறிப்பிடத்தக்கது.