25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

‘பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’: மல்யுத்த வீராங்கனைகள் அதிரடி

“நாங்கள் ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.

அந்த வகையில், 2016-ல் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வென்ற வெண்கலப் பத்தக்கத்தை வென்ற சாக்‌ஷி மாலிக்கும், டோக்கியோவில் 2020-ல் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், உலக சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ் போகத்தும் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். பதக்கங்களை ஹரித்வாரில் கங்கை நதியில் வீசிவிட்டு, இந்தியா கேட் பகுதியில் உண்ணாவிரதத்தை மேற்கொள்வோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பதக்கங்கள் தான் எங்களின் வாழ்க்கையும், ஆன்மாவும். இதை நாங்கள் கங்கை நதியில் வீசிய பின்னர் வாழ்வதற்கான அர்த்தமே இருக்காது. அதனால், இந்தியா கேட் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து புதிய நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய மல்யுத்த வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் வீரர்கள், வீராங்கனைகள் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் சமூக ஊடகங்களில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 28-ஆம் தேதி எங்களுக்கு என்ன நடந்ததென்று நீங்களே பார்த்தீர்கள். நாங்கள் ஜந்தர் மந்தரில் அறவழியில்தான் போராடினோம். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதி கோரியதால் நாங்கள் தவறிழைத்துவிட்டோமா? எங்களைக் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளனர்.

முன்னதாக, நாங்கள் எங்களின் பதக்கங்களை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். குடியரசுத் தலைவரிடம் கொடுக்கலாமா என யோசித்தோம். அவர் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில்தான் இருந்தார். ஆனால் அவர் எங்கள் வேதனையைக் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர் எங்களை (பெண் பிள்ளைகளை) மகள்கள் என்றழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா என யோசித்தோம். ஆனால், அவரோ நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறைகூட எங்களைப் பற்றி விசாரித்ததில்லை. இதை எல்லாவற்றையும்விட நாங்கள் யாருக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோமோ அவருக்கே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனால், நாங்கள் காவல் துறையைக் கண்டித்தும், நீதி கிடைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் கங்கை நதியில் பதக்கங்களை வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பின்புலம்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

இதுகுறித்து டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் – ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “சட்டம் – ஒழுங்கை மீறியதற்காக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதன் தொடர்ச்சியாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment