16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த இனத்தை சிதைத்து பின்னோக்கி இழுப்பது எவ்வளவு அநீதியானது? இனத்திற்காக குரல் கொடுப்பீர்கள் என்று பெரும் உழைப்பில் பெரும் முயற்சியில் வழங்கிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல்’ கேடு செய்யும் நீங்கள் இச் செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பிரமுகர் ஒருவர், அந்த கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான தனபாலசிங்கம் சுதாகரன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அத்துடன், ‘என்னை பின்பற்றாதே, என் கொள்கையைப் பின்பற்று… நான் கொள்கையில் இருந்து பிறழ்ந்தாலும் என்னை தண்டிக்கத் தயங்காதே…’ என்ற தேசியத் தலைவனின் வார்ப்புக்கள் ஒருபோதும் தனிமனிதனின் தவறுகளை நியாயப்படுத்தார்கள். ஆகவே சாதிய பாகுபாடு பார்க்கும் விக்னேஸ்வரனின் தலைமையில் கட்சியின் எந்த பொறுப்பையும் வகிக்க தயாரில்லையென தெரிவித்து, கட்சியின் பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் விபரம் வருமாறு-
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க.வி.விக்னேஸ்வரன் அவர்களே,
2020ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் நிகழ்ந்தேறிய ஒரு சம்பவம் தொடர்பில் ஊடகங்களில், “அருந்தவபாலன் “…” சாதி! நீங்கள் என்ன சாதியென கூற முடியுமா? என்று ஐங்கரநேசனிடம் விக்னேஸ்வரன் மின்னஞ்சல் வழியாக கேட்டார்” என்று ஏப்ரல் 14 அன்று ஊடகங்கள் வெளியிட்ட அதிர்ச்சிச் செய்தியைக் கண்டு, அதற்கு மறுநாள் ஏப்ரல் 15 அன்று, இச் செய்தி தொடர்பில் “உண்மையுள்ள செய்தியா” என்று வினாவி, தங்களுக்கு மின்னஞ்சல் வழியாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.
அதற்கு தாங்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிலின் சாராம்சத்தை முதலில் இங்கே குறிப்பிடுகிறேன். “நல்லது. நீங்கள் நேரடியாக என்னை கேட்டுள்ளீர்கள். என்னால் விளக்கம் தர முடியும். ஆரம்ப காலத்தில் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். ஐங்கரநேசனின் தாவரவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆளுமைமீது எனக்கு மிகவும் மதிப்பு இருந்தது. ஆம், தனிப்பட்ட மின்னஞ்சலில் சாதி தொடர்பில் கேட்டேன். யார் என்ன சாதி என்று எனக்கு தெரியாது. ஆட்களுடன் தொடர்புகொள்ளும் போது சாதியை பார்த்ததில்லை. இப்போதும் நான் சாதி பார்ப்பதில்லை. நான் வெள்ளாளரைவிட குறைந்த சாதியினரை நம்புவதாக என்னுடன் நெருக்கானமானவர்கள் ஒரு குற்றசாட்டை என்மீது வைத்தனர். எனது உறவினர்கள்கூட இதைச் சொன்னார்கள்.
அருந்தவபாலன் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்றும் வேறு சிலரையும் குறிப்பிட்டார்கள். அதில் ஐங்கரநேசனின் பெயரும் இருந்தது. நான் என்னுடைய அலுவலக பணியாளர்களிடம் ஐங்கரநேசனின் சாதி தொடர்பில் கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆகவே ஐங்கரநேசனிடமே அவரது தனிப்பட்ட மின்னங்சலில் அவரது சாதியைப் பற்றிக் கேட்டேன். அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. ‘ஆகவே அவர் வெள்ளாளர் இல்லை’ என முடிவு செய்தேன்.
அவர் என்ன சாதியாக இருந்தாலும் அவர்மீது மரியாதை வைத்தே இருக்கிறேன்…” என்று எனக்களித்த பதிலின் மூலம் மீண்டும் தங்களை யார் என்று மிக துல்லியதாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
தங்கள் பதிலைப் பார்த்ததும் நான் கடந்த மூன்று வருடங்களாக, சாதிப் பாகுபாடுகளால் சீழ் படிந்த சிந்தனைக்குரியவரை இனத்தின் விடியலுக்கானவர் என நினைத்து உயர்த்திப் பிடித்தமைக்காக வெட்கப்படுகிறேன். உடனடியாக பதில் எழுத வேண்டும் என்று எண்ணிய போதும், நேரமெடுத்து, நிதானமாக என் நம்பிக்கை்குரிய சிலருடன் கலந்தாலோசித்த பின்னராகவும், வலி சுமந்த மாதத்தில் இதனைக் கிளறக்கூடாது என்ற எண்ணத்திலும், ஒன்றரை மாதங்களின் பின்னரே தங்களுக்கும் மத்தியகுழுவுக்கும் திறந்த மடலொன்றை எழுதுகிறேன்.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது சாதி மதம் கடந்த சமத்துவ சிந்தனை கொண்டது. தங்களைப் போன்ற சிலர், சீழ் படிந்த சிந்தனைகளால் நிரம்பியவர்கள், காலம் காலமாக கட்டிக் காக்கப்பட்ட சாதிய சிந்தனையால் ஊதிப் பெருத்தவர்கள். இப்படியான எண்ணங்களை சகிக்கவோ, மன்னிக்கவோ முடியாது. அடியுடன் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய இச் சிந்தனை எமது இனத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கும் கேடும் ஆபத்தும் விளைவிக்கக்கூடியது.
கடந்த கால இன விடுதலைப் போராட்டதத்தால் வேற்றுமைகள் களைந்து பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் தங்களை தியாகம் செய்து இம் மண்ணில் விதையாகினர். அதன் அடையாளமாகவே எமது நிலமும் அதன் அரசியலும் தொடர வேண்டும். அது தியாகங்களால் ஆன சிந்தனை. உயிர் தியாகங்களால் செப்பனிடப்பட்ட சமத்துவப் பாதை. அதற்காக செய்யப்பட்ட தியாகங்களும் கொண்ட உறுதிகளும் அளப்பெரியன. உங்களால் அவற்றை எல்லாம் புரிந்துகொள்ள ஒருபோதும் முடியாது என்பதைதான் இந்த விளக்கங்களில் உணரத் தலைப்படுகிறேன்.
ஏனெனில் பதினாறு வயதில் ஆயுதம் ஏந்தி, தன்னையும் தன் குடும்பத்தையும் அர்ப்பணித்த வேளை, தங்கள் பார்வையில் உயர்சாதியினராக கருதிக்கொள்ளும் நீங்கள், இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யாமல், உங்கள் குடும்பமும் உங்கள் வாழ்வும் உங்கள் பதவியும் என்று இருந்துவிட்டு ஓய்வூதிய காலத்தில், தமிழரசுக் கட்சியால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டீர்கள்.
அந் நிலையில், உங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்த வாக்குகளில், நீங்கள் குறிப்பிடும் உயர்சாதியினர் அல்லாத கீழ் சாதியினரின் வாக்குகள் இல்லாமல் அன்றைக்கு முதலமைச்சர் ஆகியிருக்க முடியுமா? நீங்கள் குறிப்பிடும் வெள்ளாளரின் 100 வீத வாக்கில், முதலமைச்சர் ஆகியதாகத்தான் நம்பிக்கொண்டிருந்தீர்களா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் வெள்ளாளரின் வாக்குகளை மட்டும் நீங்கள் பெற்றிருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதும் அது ஒருபோதும் முடியாது என்பதும் சிறு குழந்தைக்கும் தெரியுமல்லவா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சறுக்கல்கள், கொள்கைசார் பிறழ்வுகள், தமிழ்த் தேசியத்தில் தாங்கள் உறுதி கொண்டதாக காட்டிக்கொண்ட தோற்றம், தலைவரைப் பற்றியும் மாவீரர்களைப் பற்றியும் நீங்கள் நேசிப்பதைப் போல காட்டிக் கொண்ட பேச்சுக்கள் ஆகியவற்றுக்காவும் அளிக்கப்பட்ட வாக்குகளே அவை. தமிழ்தேசிய ஆர்வலர்களும் முன்னாள் போராளிகளும் உங்களுக்காக அளித்த வாக்குகள் அவை. அவர்களின் உழைப்பால் வந்த வாக்குள் அவை. எல்லாவற்றையும் சாதி என்ற சீழ் படிந்த சிந்தனையால் நொருக்கிய உங்களையும் நீங்கள் செய்த துரோகத்தையும் மாவீரர்கள் மன்னிப்பார்களா? ஒருபோதும் இல்லை. எங்கள் மண்ணுக்காக மடிந்துபோன பல்லாயிரம் மாவீரர்கள் சாதிமதம் பார்த்து தமது குருதியை மண்ணில் சிந்தவில்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் விடுதலைக்காகவே தம்மை விதையாக்கியவர்கள்.
அத்துடன் 2020இல் நாடாளுமன்றத் தேர்தலில், உங்களுடன் இணைந்து அரசியலில் செயற்பட்ட நீங்கள் குறிப்பிடும் வெள்ளாளர் அல்லாத சாதியினரின் ஆதரவாலும் வாக்குகளாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டீர்கள். அப்படி எனில் உங்கள் பார்வையில் அத்தகைய சாதியினரின் வாக்குகள் வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து வாக்குகளை பெற்றுத் தந்த அவர்களிடமே பதவியை கையளிப்பீர்களா?
நீங்கள் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் வரிக்குவரி சாதிப்பற்றையும் பாகுபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அலுவலக பணியாளர்களிடம் சாதியை விசாரித்தமை, வெள்ளாளர் சாதி இல்லை என்று முடிவெடுத்தமை, வெள்ளாளர் சாதி உயர்ந்தது என்ற நம்பிக்கை என சாதித் சீழ் படிந்த சிந்தனையே தங்கள் ‘மொத்த உருவம்’ என்பதை எனக்கான பதிலில் இன்னும் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.
“அவர் என்ன சாதியாக இருந்தாலும் அவர்மீது மரியாதை வைத்தே இருக்கிறேன்…” என ஐங்கரநேசனுக்கு எழுதியிருந்ததாக என்னிடம் தெரிவித்த பதிலிலும்கூட சாதியத்தின் உச்ச திமிரை வெளிப்படுத்தியுள்ளதுடன் ‘நான் உயர்சாதிக்காரன், நீ கீழ் சாதிக்காரன் என்றாலும், உனக்கு மரியாதை தருவேன்…’ என்பது போல் சாதி ஆணவத்தின் உச்சம் வெளிப்படுமாறு பதில் அளித்தும் உங்களை யாரெனக் காட்டியுள்ளீர்கள்.
மனப்பூர்வமாக சாதி பார்க்காதவராக தாங்கள் இருந்திருந்தால் “நீங்கள் என்ன சாதி” என்று கேட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்க மாட்டீர்கள். அதற்குப் பதிலாக உங்களிடம் சாதி தொடர்பில் கேட்ட உங்கள் உறவினர்களையும் நலன்விரும்பிகளையும் வாயடைக்கும் விதத்தில் பதில் அளித்திருப்பீர்கள். நீங்கள் எனக்களித்த பதிலில் கூட உயர்வென்றும் தாழ்வென்றும் நீங்கள் நம்பும் சாதிப் பாகுபாட்டை உறுதியாக நம்பி பதில் எழுதி உள்ளீர்கள். உங்கள் மனம் சாதிய சீழ் படிந்தது என்பதை மீண்டும் தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
நான் அறிந்தவரையில், தாங்கள் கட்சி தொடங்கிய காலத்தில் தங்களுடன் இணைந்திருந்த, முக்கிய நபர்களாக அருந்தவபாலனும் ஐங்கரநேசனுமே இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிக்கொள்ளும் நண்பர்கள் அல்லது நலன் விரும்பிகள், உங்களுக்குப் பின்பு இந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை குறைந்த சாதிக்காரனிடம் கையளிக்கப் போகிறீர்களா என்று தங்களிடம் கேட்ட பின்னரே, சாதிவிடயத்தை ஆராய்ந்துள்ளீர்கள். உங்களுக்கு சாதிபார்ப்பதில் உடன்பாடு இல்லை என்றால் இந்த விசாரணை செய்திருக்கமாட்டீர்கள் அல்லவா? ஒரு கட்சியின் தலைமைத்துவத்தையே இன்னொரு சாதிக்காரனிடம் கையளிக்க தயாராய் இல்லாத தலைமை, சிங்களவரிடமிருந்து விடுதலை கேட்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கானது அல்ல ஒரு சாதிக்கானதுதானே. ஒரு சாதியின் விடுதலைக்காக ஏன் ஒட்டுமொத்த இனமும் சிலுவை சுமக்க வேண்டும். சிங்களவரிடமிருந்து அடிமையாக இருப்பதற்கு பதிலாக தன் சொந்த இனத்தின் ஒரு பகுதியினரிடம் அடிமையாக இருக்கவா? சமூக விடுதலையுடன் கூடிய இனவிடுதலை இல்லை என்றால் அந்த இனவிடுதலையே தேவை இல்லை எங்கள் விடுதலைப் போராட்டமும் தமிழினத்தின் தேசியத் தலைமையும் எனக்குக் கற்றுத் தந்தது.
இனி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் என்று கருதுகிறேன்.
நீங்கள், தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் பெயரை மாற்றி “உயர் சாதிக் கூட்டணி” என்று மாற்றி உங்களை குறைந்த சாதியினருடன் சேரக்கூடாது என விமர்சித்த உறவுகள், நலன்விரும்பிகளை இணைத்து உங்கள் சாதிய அரசியலை செய்யுங்கள். அதனை விடுத்து, இனியும் தமிழ் தேசிய மூகமூடியை அணிந்துகொண்டு எமது மக்களை ஏமாற்ற வேண்டாம் என்பதனை வலியுறுத்துகின்றேன்.
கட்சி ஆரம்பித்த காலத்தில் எங்கள் கட்சியில் அரசியல் அறிவுள்ள ஒரே ஒரு நபரான அருந்தவபாலன் அவர்களை ஒதுக்கி, அரசியல் பட்டறிவு இல்லாத சிலரை முன்னிறுத்தி தாங்கள் செய்த அரசியலின் சூட்சுமம் தற்போதுதான் எனக்கு புரிகிறது. உங்கள் பார்வையில் குறைந்த சாதியை சேர்ந்தவர் என்பதனாலேயே அருந்தவபாலனை ஒதுக்கினீர்கள் என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
மாகாண சபை பதவிக்காலம் முடித்து, கொழும்பு செல்ல இருந்த தங்கள் செலவுகளைப் பொறுப்பெடுத்து, யாழ்ப்பாணத்தில் தங்க வைக்க பணம் தந்தவர்கள் எந்த சாதியினர் என்று உங்கள் நலன்விரும்பிகள், உறவினர்கள் கேட்கவில்லையா? தமிழினத்தின் விடியலுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று நம்பி புலம்பெயர் தேசத்தில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து உங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியவர்கள் எந்த சாதியினர் என்று உங்கள் நலன்விரும்பிகள், உறவினர்கள் கேட்கவில்லையா? அல்லது உங்கள் வெற்றிக்காக இரவுபகலாகத் தேர்தலில் பல்வேறு வேலைப்பளுக்களை சுமந்து உங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியவர்கள் எந்தச் சாதி என்று உங்கள் நலன்விரும்பிகள், உறவினர்கள் கேட்கவில்லையா?
உங்கள் பார்வையில் அவர்கள் கீழ் சாதியினர் என்றால் அவர்களிடம் இருந்து பணம் பெற்றிருக்க மாட்டீர்கள். அவர்களால் பதவி பெற்றிருக்க மாட்டீர்கள். சாதி பார்க்கும் உங்கள் நலன்விரும்பிகள் நண்பர்களிடமிருந்து பணத்தை பெற்று திருப்பிக் கொடுங்கள். உங்கள் பார்வையில் கீழ் சாதியால் வந்த பதவியையும் உடன் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் கொழும்புக்கு சென்றுவிடுங்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, உங்கள் அரசியலில் சில சறுக்கல்கள் இருந்தாலும் இருக்கும் தலைவர்களில் தீமை குறைந்தவர் என்று நம்பி, உங்களை ஆதரிக்கும் நிலையைக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த சாதிய விடயத்துடன் இருக்கும் அரசியல் தலைவர்களில் மிகவும் ஆபத்துக் கொண்டவர் தாங்கள் என்பதையும் உடன் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவரும் தாங்களே என்ற முடிவுக்கும் வந்துள்ளேன்.
மத்திய குழுவின் அனுமதியின்றி ரணிலுக்கு ஆதரவாக கை உயர்த்தியமை, அமைச்சுப் பதவிகளுக்காக ரணில் தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமை, வட மாகாண அரச உயர் அதிகாரிகளாக சிங்களவர்கள் வருவதை எதிர்த்துவிட்டு கட்சியின் நிறைவேற்று அலுவலராக சிங்களவரை நியமிக்க முயன்றமை போன்ற தங்கள் சறுக்கல்களை எல்லாம் விஞ்சிய வகையில் சாதியப்பாகு பார்த்தல், சாதித் திமிரோடு நடத்தல் முதலிய சறுக்கல்கள் இருக்கின்றன.
மிகப் பெரும் வலியும் கவலையும் கொள்ள வேண்டிய விடயம் என்ன தெரியுமா? சிங்கள இனத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் தாராளவாதியான தாங்கள், சொந்த இனத்தில் சாதி பார்க்கும் உங்கள் பாகுபாட்டு மனநிலையை என்னவென்பது? அதுவும் மாபெரும் இனவழிப்பாலும் தோல்வியாலும் நொந்துபோன நிலையில் இருக்கும் இனத்தில் சாதி பார்த்து உங்கள் சுயலாப தன்முனைப்பு அரசியலை செய்வது எவ்வளவு அநீதியானது?
சர்ச்சைக்குரிய சாமியார் பிரேமானந்தாவை குருவாக ஏற்றுக்கொண்ட தாங்கள், கீழ்சாதி என பாகுபடுத்தவும் அதனை பெருமைப்படுத்திப்் பேசவும் அருகதை கொண்டவரா?
“பிரேமானந்தா என்ற குற்றவாளியை ஏன் வணங்குகிறீர்கள்” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, யேசுவை துணைக்கு அழைத்துப் பதில் அளித்த தாங்கள், சாதி பற்றி உங்கள் உறவினர்கள் கேட்ட போது சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது, அப்படி ஒன்று எமக்கு தேவையில்லை என்றல்லவா பதில் அளித்திருக்க வேண்டும்.
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த இனத்தை சிதைத்து பின்னோக்கி இழுப்பது எவ்வளவு அநீதியானது? இனத்திற்காக குரல் கொடுப்பீர்கள் என்று பெரும் உழைப்பில் பெரும் முயற்சியில் வழங்கிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல்’ கேடு செய்யும் நீங்கள் இச் செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.
எனது சக்திக்கு மீறிய வகையில் என் கடுமையான உழைப்புக்களை இந்தக்கட்சிக்கும் உங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் வழங்கியுள்ளேன். என்றபோதும் இந்த விடயத்தின் பின்னர், தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் மத்தியகுழு உறுப்பினர் பதவியில் இருந்தும் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தும் உடனடியாக விலகுகிறேன். எனினும் உங்கள் காலத்தின் பின்பு, சரியான தலைமையின் கீழ் மீண்டும் இணைந்து பணியாற்றும் உறுதியான நம்பிக்கையில் எனது ஆயுட்கால உறுப்புரிமையில் இருந்து விலகாமல் இருக்கவும் தீர்மானித்துள்ளேன். ஆயினும் எனது விமர்சனங்களால் எரிச்சலுற்று, என்னை நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கலாம். அப்படி நடந்தால், தாங்கள் ஒரு மனசாட்சி இல்லாத ஜனநாயகத்தை மதிக்காத ஒருவர் என்பதும் வெளிப்பட்டு நிற்கும். அதை நினைத்து நான் வருந்தப் போவதுமில்லை.
‘என்னை பின்பற்றாதே, என் கொள்கையைப் பின்பற்று… நான் கொள்கையில் இருந்து பிறழ்ந்தாலும் என்னை தண்டிக்கத் தயங்காதே…’ என்ற தேசியத் தலைவனின் வார்ப்புக்கள் ஒருபோதும் தனிமனிதனின் தவறுகளை நியாயப்படுத்தார்கள். பதவிக்காக கொள்கை வழி மாறியவர்களிம் சரணாகதி அடையார்கள். நான் உட்பட பலர், தங்களுக்கு ஒரு கொள்கைவாதி என்ற ஒளிவட்டத்தை தந்து உயர்த்தி வைத்துள்ளோம்.
நான் ஒரு சாமானியன், இந்தக் கடிதத்தால் தங்களுக்கு பெரிதாக பாதிப்பு வராதென உங்களைப் போல் நானும் நம்புகிறேன். ஆயினும் கோலியாத்தை எதிர்த்த தாவீது போல நானும்…
வாழ்க்கையில் தாங்கள் மிக்க நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழவேண்டும் என்பதே என் விருப்பமும் பிரார்த்தனையும். ஆனால் தங்கள் அரசியல் ஆயுள் விரைவில் முடிவதே இனத்திற்கு நலமும் ஆயுளும் அளிக்கும்.
நன்றி
இவ்வண்ணம்,
தனபாலசிங்கம் சுதாகரன்
கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர்,
மத்தியகுழு உறுப்பினர்,
தமிழ் மக்கள் கூட்டணி.