நுவரெலியா மாவட்டத்திற்கு ஐந்து புதிய பிரதேச செயலகங்கள் வழங்கப்படுவதற்கான வர்த்தமானி 2019 ஆண்டு வெளிவந்த போதும் 2021 ஆம் ஆண்டு அதனை உப பிரதேச செயலகங்களாகத் திறந்து வைத்தவர்களே இன்று பிரதேச செயலகமாக திறந்து வைக்க நேர்ந்ததுள்ளது. திறந்து வைத்தது யாராயினும் அதனைத் திறந்த வைக்க காரணமானது மலையக அரசியல் அரங்கத்தின் போராட்டமேயாகும். பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்பட்ட பாரபட்சம், காட்டிக் கொடுப்புக்கு எதிராக மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, நோர்வூட் பிரதேச செயலகங்கள் திறந்து வைக்கப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரப் பகிர்வு முதலாகவும் அதனை அடுத்ததாக அரசியல் அதிகார பகிர்வும் அவசியமானது என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததோடு, நிர்வாக அதிகார பகிர்வின் அங்கமாக பிரதேச செயலக முறைமைக்குள் இந்த மக்களை உள்வாங்குவதற்கு ஏற்றதாக பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை மலையக சமூகத்தின் கோரிக்கையாக இருந்தது. அந்த சமூக மட்ட கோரிக்கையை அரசியல் கோரிக்கையாக மாற்றி 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றில் பிரேரணையாக முன்வைத்ததன் விளைவாகவே 2019 ஆம் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து புதிய பிரதேச செயலகங்களை உருவாக்க வர்த்தமானி பிரகடனம் வெளியானது. ஆனாலும் அதனை முறையாக அமுல்படுத்தாமல் 2021 ஆம் ஆண்டு உப பிரதேச செயலகமாக திறந்து வைத்தார்கள். அந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத பாரபட்சம் மாத்திரமன்றி பெற்ற உரிமையைக் காட்டிக் கொடுத்த செயலுமாகும். இந்த காட்டிக் கொடுப்புக்கும் பாரபட்சத்துக்கும் எதிராக மலையக அரசியல் அரங்கம் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினைப் பதிவு செய்தது. துறைக்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களைச் சந்தித்து பாரபட்சத்தை நீக்கி உரிய வகையில் முழுமையான பிரதேச செயலகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
அன்று கையெழுத்து இயக்கத்தால் இதனை சாதிக்க முடியுமா என ஏளனம் செய்தவர்கள் இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ளனர். உப செயலகமும் பிரதேச செயலகமும் ஒன்றுதான் என சப்பைக் கட்டு கட்டியவர்களே இன்று பிரதேச செயலகமாக திறந்து வைக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் தமது பரம்பரை அரசியல் பேசும் இவர்கள் இந்த பிரதேச செயலக விடயத்தில் திறந்துவைப்பு நாடகத்தைத் தவிர வேறு எந்த ஆணியையும் புடுங்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். மலையக இளைய தலைமுறையினர் மாற்று அரசியல் தரப்பாக தம்மை முன்னிலைப்படுத்தினால் மாத்திரமே நமது இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு இந்த வெற்றி பெரும் எடுத்துக் காட்டு. திறந்து வைப்பது யாராகவும் இருக்கட்டும். ஆனால் திறக்க வைத்தது நாம்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.