உயிரிழந்த சிறுவனின் சடலத்தை தந்தையொருவர் வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிசார் அவசர விசாரணைகளை முன்னெடுப்பதாக நுவரெலியா பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவிற்கு வந்திருந்த போது திடீரென சுயநினைவை இழந்ததாக கூறி 14 வயதுடைய சிறுவனொருவர், தந்தை என கூறிக்கொள்ளும் நபரால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறுவன் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததும், தந்தை கோபமடைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். முன்பு ஒரு முறையும் தன் மகன் சுயநினைவின்றி இருந்தபோது இறந்துவிட்டதாக வைத்தியர்கள் பயமுறுத்தியதாக கூறினார்.
சிறுவனை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு, தான் வந்த பேருந்தில் சிறுவனின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
வைத்தியசாலை நிர்வாகத்தினர் பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
சிறுவனை ஏற்றிச் செல்லும் பஸ் வைத்தியசாலையின் பாதுகாப்பு கமரா அமைப்பின் ஊடாக கண்காணிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நுவரெலியா பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.