பிரபல பாடகர் ஒருவரின் பியானோவைத் திருடிய நபரை அனுமதியின்றி தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் குழுவினரால் திவுலப்பிட்டியவில் சனிக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தந்தை மற்றும் மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
தந்தை மற்றும் மகனை அவர்களது வீட்டில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடகரின் குடும்பத்திற்கு சொந்தமான கம்பஹாவில் உள்ள பேக்கரியை குடும்ப உறுப்பினர் ஒருவர் கவனித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாடகருக்கு சொந்தமான பியானோ உட்பட பல இசைக்கருவிகள் பேக்கரி அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்தன.
சில நாட்களுக்கு முன்பு பியானோ காணாமல் போனதாகவும், பாடகர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கம்பஹா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். தமது உறவினர் ஒருவரே திருடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவிற்கு அமைய கம்பஹா தலைமையக பொலிஸார் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கூறப்படும் திவுலப்பிட்டிய சல்கடுவத்தையில் உள்ள வீட்டிற்கு 26 ஆம் திகதி காலை சென்றுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவ்வாறான அறிவித்தலையும் மீறி, சனிக்கிழமை (27) அதிகாலை 1 மணியளவில் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அடங்கிய குழுவினர் இந்த வீட்டுக்குச் சென்று சந்தேக நபரைத் தேடிச் சென்று, அப்போது வீட்டில் தங்கியிருந்த தந்தை மற்றும் மகனைத் தாக்கியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
தாக்குதலுக்கு வந்த பொலிஸ்காரர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர் கம்பஹா பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் அவருடன் சென்ற மற்றைய பொலிஸ்காரரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி தயாரிப்பாளரான பெண் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், பணிப்பெண் ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.