விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, கனிகா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார் மதுரா.
ஜேர்மனியில் வசிக்கும் மதுரா யாழ்ப்பாண பூர்வீகத்தை கொண்டவர்.
அவர் கூறியதாவது:
இப்போது ஜெர்மனியில் இருக்கிறேன். என் அம்மா, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அப்பா ஜெர்மனிக்காரர். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். நான் ஜெர்மனியில் சட்டத்தரணிக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சியில் இருக்கிறேன். சிறு வயதில் இருந்து தமிழ் மொழி, பரதம், கர்னாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றேன். ஜெர்மன் பிராங்பேர்ட் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.
சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் உள்ள நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளேன். இந்த வீடியோக்கள்தான் ‘யாதும் ஊரே யாவரும் களிர்’ பட வாய்ப்பு எனக்கு பெற்றுத்தந்தன.
இலங்கை அகதிகளின் கதை என்பதாலும், என் அம்மா இலங்கை அகதி என்பதாலும் இந்தப் படத்தில் நடித்தேன். தமிழ் சினிமாவில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ் அகதிகளின் வலியை சொன்ன படத்தில் நடித்ததை இன்னும் பெருமையாக கருதுகிறேன். விஜய் சேதுபதி, விவேக் ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவம். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரை விரும்புகிறேன் என மதுரா கூறினார்.