23 வயதான அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தற்போது 722 புள்ளிகளுடன் 7வது இடத்தில் அவர் உள்ளார்.
இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென்னாபிரிக்கா), ஃபகார் ஸமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வோர்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8வது இடத்தில் உள்ளார். டிகொக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார். அதோடு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 206 ரன்களுடன் அதிக ரன் எடுத்த வீரரானார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் அவர் முன்னேற்றம் கண்டார்.
முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2021 ஜூனில் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்து அணி வீரர் போல் ஸ்டெர்லிங் 697 புள்ளிகளை பெற்றுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த இயன்மோர்கன், ஐசிசி தரவரிசையில் கடந்த 2019 இல் 712 புள்ளிகளை பெற்றுள்ளார். இருந்தாலும் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த தரப்படுத்தலில் இலங்கை சார்பில் அசலங்கவே முன்னணியில் உள்ளார். அவர் 46வது இடத்தில் உள்ளார்.