திங்கட்கிழமை (15) மாலை ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்வதற்காக மன்னாரில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போது கத்தியால் குத்த முயன்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பேசாலை பெரியகரிசல் பகுதியைச் சேர்ந்த எம்.யு.எம்.ஜலீல் (25) என்ற நபரே மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார், பெரிய கரிசல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மன்னார் முகாம் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து, அந்த இடத்தை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் மன்னார் முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜயசிங்க உத்தியோகபூர்வ சீருடையில் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான மதுசங்க (38813), சமரவீர (94646) ஆகியோர் சிவில் உடையில் கலந்துகொண்டனர்.
அதிரடிப்படையினர் சாதாரண உடையில் போதைப் பாவனையாளர்கள் போன்ற பாவனையில், வீட்டுக்குச் சென்று போதைப்பொருள் வியாபாரியான ஃபர்ஹான் என்ற 23 வயது இளைஞரை சந்தித்து 1000 ரூபாய் நோட்டுகள் இரண்டைக் கொடுத்து ஐஸ் போதைப்பொருளைக் கேட்டுள்ளனர். அவர் போதைப்பொருளை கொடுக்க தயாரான போது, போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயாரான போது போதைப்பொருள் கடத்தல்காரர் சத்தம் போட்டுள்ளார்.
பேசாலையில் வசிக்கும் ஜலீல் என்ற நபரே கத்தியுடன் ஓடிவந்து, கொன்ஸ்டபிள் சமரவீரவை வெட்டியதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். அவருடன் இருந்த கான்ஸ்டபிள் மதுசங்க, தனது சக உத்தியோகத்தரியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஜலீல் என்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, சீருடையில் அதிகாரிகள் குழு அருகில் இருந்த இடத்தில் இருந்ததாக அதிரடிப்படை தற்போது கூறுகிறது.
உடனடியாகச் செயற்பட்ட அவர்ள், ஜலீல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதைக் கண்டறிந்து, அவரை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையில், போதைப்பொருள் வியாபாரி ஃபர்ஹான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 390 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய 10 தோட்டாக்கள் அடங்கிய மகசீனுடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கையளித்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
-மார்க் அன்ரனி லெசாரியோ-




