தாய்லாந்தின் புதிய ஜனாதிபதி யார் என்ற பரபரப்புக்கு மத்தியில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த தேர்தலில், வாக்களிக்கச் சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றவர், சட்டபூர்வமான மனைவி.
காரணம், அவர் மனைவியை ஏற்றி, கள்ளக்காதலியுடன் வாக்களிக்கச் சென்றுள்ளார். இதை அறிந்த மனைவி, வாக்களிப்பு நிலைய வாசலில் வைத்து கணவனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.
பாங்கொக் அருகே உள்ள சமுத் பிரகர்ன் மாகாணத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நேற்று பொதுத் தேர்தலின் போது இந்தச் சம்பவம் நடந்தது.
நேற்று மதியம் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி கமரா காட்சிகள் வெளியாகியுளள்ன. அதில், பிக்கப் டிரக் ஒன்று வேகமாக சென்று மின்கம்பத்தில் மோதுகிறது. பிக்கப்பின் பின்புறமாக இருந்த சிவப்புச் சட்டை அணிந்த ஒரு பெண், தனது பிக்கப் டிரைவரான கணவரைக் கொல்லும் நோக்கில் பின்பக்க ஜன்னலில் பல முறை சுடுகிறார்.
வாகனம் மின்கம்பத்தில் மோதி நின்றதும், வாகனத்தின் பயணிகள் இருக்கையில் இருந்த கள்ளக்காதலி கீழே இறங்கி, வாடகை வண்டியொன்றில் ஏறி தப்பியோடுகிறார். பிக்கப் சாரதியான கணவர், வீதியில் விழுந்தார். அவர் காயமடைந்திருந்தார். மனைவியிடமிருந்து தப்பியோடும் அவரது முயற்சி வெற்றியடையவில்லை. அங்கு சிலர் கூடி, மனைவியை பிடிப்பதற்கு முன்னதாக, கணவனை சில பல முறை கத்தியால் குத்தி விட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு மீட்புக் குழு மற்றும் சாம்ராங் நியூ காவல் நிலைய அதிகாரிகள், காயமடைந்த நபரை உடனடியாக சமுத் பிரகர்ன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்தியவர் 61 வயதான சமோர்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 63 வயதான கணவர். இருவரும் சட்டபூர்வ தம்பதியர்.
சமோர்ன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கணவர் பல கள்ளக்காதலிகளை வைத்திருந்து, தன்னை ஏமாற்றி வருவதால், விரக்தியின் உச்சத்தில் இந்த முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளார்.
திருமணமான காலம் முதலே கள்ளக்காதல்களை வளர்த்து தன்னை ஏமாற்றியதாகவும், தனது கணவரை கொல்ல விரும்பவில்லை, இரண்டு “சூடு வைத்து“ அவரை திருத்த விரும்பினேன் என்றார்.
ஆனால் கணவனுக்கு ஏற்படுத்திய காயங்களால் அவர் இறந்துவிட்டாலும் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த ஜோடி 1982 இல் சந்தித்து திருமணம் செய்து கொண்டது, அவர்களின் குழந்தைகள் இப்போது பெரியவர்களாகிவிட்டனர். சமோர்ன் தனது கணவர் தன்னை எப்போதும் ஏமாற்றி வருவதாகவும், பல பெண்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகவும் கூறினார். கள்ளக்காதலிகளுக்காக செலவிடுவதற்காக அவர்களது கார்கள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை கணவர் இரகசியமாக விற்றுவிடுவார் என்றும் தெரிவித்தார்.
2019 முதல் தனித்தனியாக வாழ்ந்தாலும், தன்னை விவாகரத்து செய்ய தனது கணவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சமோர்ன் கூறினார். அப்பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க கணவர் கள்ளக்காதலியை அழைத்துச் செல்வார் என்பதை அறிந்த அவர், கணவருக்கு பாடம் கற்பிக்க பாங்கொக் செல்ல முடிவு செய்தார்.
அவரது கணவர் வாகனத்தை நிறுத்த மறுத்ததால், சமோர்ன் பிக்கப் மீது பாய்ந்து, அவருக்கு சொந்தமான .38 துப்பாக்கியால் சுட்டார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 289 இன் படி, சமோர்ன் மீது வேண்டுமென்றே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது ஆயுள் தண்டனை அல்லது 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும். கூடுதலாக, அவர் மீது துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள், பட்டாசுகள் மற்றும் போலி ஆயுதங்கள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



