போலி நாணயத்தாள் அச்சிடப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் 19 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்ட விவகாரத்திலேயே, பாடசாலை மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி, ஆனையிறவு வீதித்தடுப்பில் பொலிசார் மேற்கொண்ட சோதனையில், போலி நாணயத்தாள்களுடன் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற போது அவர்கள் கைதாகினர். மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்தவர் கொண்டு சென்ற பையில் இருந்து போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
5,000 ரூபாய் 250 போலி நோட்டுகளும், 500 ரூபாய் 27 போலி நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. வரிசை எண்களும் அவற்றில் பொறிக்கப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட பணத்தின் பெறுமதி 1.2 மில்லியன் ரூபா.
பல்கலைக்கழக மாணவன் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாண பல்கலைகழக்கழ கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயில்கிறார். முச்சக்கர வண்டி சாரதி மிருசுவில் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், போலி நாணயத்தாள் அச்சிடப்பட்ட விவகாரத்தில் பாடசாலை மாணவன் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. கொடிகாமத்தை சேர்ந்த 19 வயதான பாடசாலை மாணவன், நேற்று யாழ்ப்பாண நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.




