மன்னாரில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த தெய்வ சிலைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள வீதித் தடுப்பில் வாகனச் சோதகையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மே 7ஆம் திகதி சந்தேகநபர்களை கைது செய்தனர்.
மன்னாரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பயணிகள் பேருந்தை சோதனையிட்ட போது, சந்தேக நபர்கள் மூவரையும் சிலையுடன் பிடித்தனர்.
சிலை விற்பனை செய்வதற்காக கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது விஷ்ணுவின் சிலை என பொலிசார் தெரிவித்தனர்.
சிலையுடன் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மன்னார் எருக்கலம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றையவர் மீனவர் (39). தோட்டத்தை சுத்தம் செய்யும் போது சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனை கழுவிய பின் கோயிலில் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர்கள் அதனை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலை தொடர்பில் தொல்பொருள் அறிக்கை பெறப்படும் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
-மருசலீன் மார்க் குஞ்சன்-




