ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சை முன்னெடுக்க முடியாது. முக்கியமாக, வடக்கு, கிழக்கு என தனித்தனியாக பேச்சு நடத்த முடியாது என்பது இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்பதை இன்று ஜனாதிபதியிடம் நேரில் தெரிவிப்போம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் இன்று (9) சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கொழும்பில் நேற்று தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் சந்தித்தனர்.
இதன்போது, இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட தயாரில்லையென்பதையும், தமிழ் தரப்புடன் இணைந்து தயாரிக்கும் திட்டமிட்ட குறுகிய கால நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இணைந்து செயற்பட தயார் என்றும் இன்று ஜனாதிபதியிடம் தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினையை வடக்கு, கிழக்கு என பிரித்து அணுகும் ஜனாதிபதியின் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த இரண்டு விவகாரங்களும், இரா.சம்பந்தனால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவை பொறுத்தே 11ஆம் திகதி சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்றார்.




