நடப்பு ஐபிஎல் சீசனின் 42வது லீக் போட்டியில் 213 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி, வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ராஜஸ்தான் ரோயல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை. சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் என இருவரும் தங்கள் அதிரடியால் மும்பைக்கு இந்த வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்தப் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு தொடக்கமே சறுக்கல்தான். கப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேமரூன் க்ரீன், இஷான் கிஷன் உடன் இணைந்து 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். கிஷன், 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். க்ரீன், 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கூட்டு சேர்ந்தனர். இருவரும் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணி மும்பை அணிக்கு அவசியமான ஒன்றாக அமைந்தது. 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் அவுட் ஆனார். அவரை ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா அபாரமாக கட்ச் பிடித்து வெளியேற்றி இருந்தார்.
15.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் வந்தார் டிம் டேவிட். 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் சிக்ஸர் விளாசி அசத்தினார். ஹோல்டர் அந்த ஓவரை வீசி இருந்தார். மறுமுனையில் திலக் வர்மா, 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.
முன்னதாக, இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. வழக்கம் போலவே அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என இருவரும் முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வாலுக்கு துணையாக நின்ற பட்லர், 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன் பின்னர் களம் வந்த கப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹோல்டர், ஹெட்மயர், துருவ் ஜுரல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இருந்தும் மறுமுனையில் ஜெய்ஸ்வால் அடங்க மறுத்தார். எத்தனை விக்கெட்டுகள் சரிந்தாலும் நான் எனது பாணி ஆட்டத்தை ஆடுவேன் என சொல்வது போல இருந்தது அவரது இன்னிங்ஸ்.
அதன் பலனாக ஐபிஎல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். இந்த சதம் அவரது சொந்த ஊரான மும்பை மண்ணில் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு. 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டர்கள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். கடைசி ஓவரின் 4வது பந்தில் அவரது விக்கெட்டை அர்ஷத் கான் கைப்பற்றினார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.
ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடம் பிடித்துள்ளார். அதே போல சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் இந்த அபார இன்னிங்ஸ் மூலம் அவர் படைத்துள்ளார்.
நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஒரேஞ்ச் தொப்பி பெற்றுள்ளார்.
இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000வது போட்டியாகும்.