சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூடானின் முன்னாள் ஜனாதிபதியான உமர் அல்-பஷீர், ஏப்ரல் 15 அன்று சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) துணைப் படைகளுக்கும் (RSF) இடையே சண்டை மூளுவதற்கு முன்பு, கோபர் சிறையிலிருந்து கார்ட்டூமில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
புதன்கிழமை (ஏப்ரல் 26) இராணுவத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு அறிக்கையின்படி, பஷீர் மற்றும் 30 பேர் மோதல் தொடங்குவதற்கு முன்பு கோபர் சிறையில் உள்ள மருத்துவ ஊழியர்களின் பரிந்துரையின் பேரில் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சமூக ஊடங்களில் பரவும் வீடியோக்கள் நீண்ட வரிசையில் கைதிகள் தங்கள் தோளில் சாமான்களை மாட்டிக்கொண்டு சிறைச்சாலையை விட்டு வெளியேறுவதைக் காட்டுகின்றன. அவரது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அலி ஹாரூன், மற்ற முன்னாள் அதிகாரிகளுடன் சிறையிலிருந்து வெளியேறியதாக செவ்வாயன்று கூறியதை அடுத்து, பஷீரின் இருப்பிடம் கேள்விக்குறியாகியிருந்தது.
இந்த நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி குழுவினர் இராணுவ மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக சூடானை ஆண்ட உமர் அல்-பஷீர், பல ஆண்டுகளாக தனது அரசாங்கத்துடன் போராடிய டார்ஃபுர் பகுதியில் 2003 மற்றும் 2008 க்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படுகிறார்.
2019 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் போது அல்-பஷீர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இருப்பினும், அவரை ஆட்சியில் இருந்து அகற்றிய SAF மற்றும் RSF, இப்போது ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
போரிடும் பிரிவுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இருப்பினும், புதனன்று, புதிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்ட பின்னர், போர் நிறுத்தம் பலவீனமாகவே இருந்தது.
ஐநா அமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி, நடந்து வரும் மோதலில் குறைந்தது 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.