சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படமும், ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் கிட்டத்தட்ட ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், படத்தை ஓகஸ்ட் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ மற்றும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ‘மாவீரன்’ பெயரில் ரஜினி நடிப்பில் 1986ஆம் ஆண்டு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



