தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. பேராவூரணி ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர். இவரது கணவர் சுவாமிநாதன்(56). குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பழங்குடியின பெண்கள் சிலர் நேற்று பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, சுவாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் அந்தப் பெண்கள் குப்பை சேகரித்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்கள் பொருட்களைத் திருடிச் செல்வதாகக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டிய சுவாமிநாதன், அவர்கள் வைத்திருந்த பையில் உள்ள பொருட்களை கீழே கொட்டும்படி கூறி, ஒரு பெண்ணை காலணியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உத்தரவுப்படி, சுவாமிநாதனை வாட்டாத்திக்கோட்டை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தலிங்கம் அளித்த புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.