நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் 12 வயது மகளான ஆராத்யா, அவதூறு கிளப்பும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன் எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது 12 வயதாகும் ஆராத்யா பச்சன் நிறைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களுக்கு பெற்றோருடன் கலந்து கொண்டு வருகிறார். அதனை முன்வைத்து ஆராத்யா உடல்நிலை சரியில்லை என்றும், அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் சேனலைச் சேர்ந்த பலரும் அவதூறு பரப்பி வந்தனர்.
இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் எனவும் ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் நன்கு பரிச்சயமான நபர், அதனால் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என் மகள் அதற்கு அப்பாற்பட்டவர். அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்துக்கு நேராக வந்து சொல்லுங்கள்” என அண்மையில் அபிஷேக் பச்சன் கோபப்பட்டு பேசியிருந்தது குறிப்பிடதக்கது.
நீதிபதி கண்டனம்: இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரி சங்கர் கூறுகையில், சாமான்யரின் குழந்தையோ, செலிப்ரிட்டி குழந்தையோ. பாரபட்சமின்றி ஒவ்வொரு குழந்தையும் மாண்புடன், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்கள் அதைப்பெறத் தகுதியானவர்கள். ஒரு குழந்தையின் உடல்நலன், மன நலம் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது முற்றிலுமாக பொறுத்துக் கொள்ள முடியாதது.
குழந்தை தனது தந்தையின் வாயிலாக தொடர்ந்துள்ள வழக்கில், ”ஆராத்யா அரோக்கியமான பள்ளி செல்லும் குழந்தை. ஆனால் சில விஷமிகள் அவரைப் பற்றி பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். யூடியூபர்கள் சிலர் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இன்னும் சிலர் அவர் இறந்தேவிட்டதாகவும் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
அந்த வீடியோக்களில் மார்ஃப் செய்யப்பட்ட படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் பிரபலங்கள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுவது இது முதன்முறையல்ல. இருப்பினும் குழந்தை என்றுகூட பாராமல் பரப்பப்பட்டிருக்கும் இந்த தகவல் அதனைப் பரப்பியவர்களின் உச்சபட்ச மனப்பிறழ்வையே காட்டுகிறது” என்றார்.
கூகுள் யூடியூப் கைவிரிப்பு: இந்த வழக்கில் கூகுள், யூடியூப் நிறுவனங்கள் தங்கள் கருத்தை தாக்கல் செய்தன. சைல்ட் போர்னோகிராஃபி போன்ற ஆபாசங்களைத் தடுப்பதில் கூகுளுக்கு பூஜ்ய சகிப்பின்மை இருக்கிறது. இதற்காக பிரத்யேக வழிவகிகளை பின்பற்றுகிறோம். பார்வையாளர்களே அதுபோன்ற அபத்தஙக்ள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக கூகுளின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். ஆனால் இதுபோன்ற அவதூறி கன்டென்ட் மீது நேரடியாக கட்டுப்பாடு இல்லை. யாரேனும் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் ஆஜராத மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், ஐடி சட்டம் 2021ஐ சுட்டிக்காட்டி கூகுள், யூடியூப் ஐறுவனங்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்து இத்தகைய அபத்தங்களை தவிர்க்க வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கும், இணையதளங்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.