போதைப்பொருளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்-
யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் வீதிப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலீஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுப் பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களின் சிபார்சின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில், போதைக்கு அடிமையாகி இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைத் தேவையான உளவளத் துணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் நேரடியாக அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் பொலீஸார் எடுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைளிலும் பல்கலைக்கழகம் குறுக்கிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், அவர்கள் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 20 மாணவர்கள் இன்று நண்பகல் பரீட்சை முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் 20 பேருமே போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதியானது.
சில மாணவர்கள் பரிசோதனைக்கு முன்னரே தாம் போதைப்பொருள் பாவிப்பதை ஏற்றுக்கொண்டனர். சில மாணவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளனர். சிலர் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் மோர்பின், பிரிகாவிலின் போன்ற அதிசக்தி வாய்ந்த வலி நிவாரணிகளை பயன்படுத்தியுள்ளனர்.
மேற்படி வலி நிவாரணிகள் தற்போது அரச வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்கு தட்டுப்பாடாக உள்ளது. எனினும், இவை போதைப்பொருள் பாவனையாளர்கள் மத்தியில் உலாவுவது குறிப்பிடத்தக்கது.
இன்று பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் சட்டவைத்திய பீடத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை. சட்டவைத்திய பீடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால், மாணவர்கள் சிறைத்தண்டனையையும் எதிர்கொண்டிருக்க வேண்டிருக்கும். அதை தவிர்ப்பதற்காக, மாணவர்கள் நேரடியாக உளவளச்சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன் பின்னரே, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மாணவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளாமல், உளவளச்சிகிச்சையுடன் தப்பிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் பாவித்த போதை மாத்திரையொன்று புற்றுநோயாளிகளிற்கு வலி நிவாரணியாக வழங்கப்படுவது. இலங்கையில் தற்போது மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புற்றுநோயாளிகளிற்கான மருந்தும் தட்டுப்பாடாகியுள்ளது. ஆனால் போதைப் பாவனையாளர்களிடையே இந்த மாத்திரை பயன்பாட்டில் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வி பீடங்களிலும் போதைப்பொருள் பாவனை தாராளமாகியுள்ளதை இந்த சம்பவம் புலப்படுத்துகிறது. பெற்றோரும், குடும்பத்தினரும் விழிப்புணர்வுடன் இருப்பதே இளைய சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க ஒரே வழியாகும்.