குயின்ஸ்டவுனில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் ஆடிய இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது.
முதல் விக்கெட்டிற்காக இலங்கை 9.2 ஓவர்களில் 76 ஓட்டங்களை குவித்தது.இதில் மந்தமாக ஆடிய பதும் நிசங்க 25 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றார். இப்பொழுது ஒருநாள் ஆட்டங்களிலும் தொடக்க வீரர்கள் இவ்வளவு மந்தமாக ஆடுவதில்லை. ஆனாலும், இந்த தொடர் முழுவதும் ஃபோர்மை தொலைத்து விட்டு திண்டாடும் நிசங்க ஒரு அறுவை இன்னிங்சிலாவது அது கிடைக்குமா என தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
நிசங்க இப்படி கட்டையை போட்டாலும், மறுமுனையில் குசல் மெண்டிஸ் வழக்கம் போல காட்டுக்காட்டினார்.
48 பந்துகளில் 73 ஓட்டங்கள். 5 சிக்சர்கள், 6 பௌண்டரிகள்.
குசல் பெரேரா 20 பந்துகளில் 31 ஓட்டங்கள், தனஞ்ஜய டி சில்வா 9 பந்துகளில் 20 ஓட்டங்கள். மற்றையவர்கள் யாரும் சொல்லும்படி ஆடவில்லை. குறி்ப்பாக பின்வரிசை பலவீனத்தால் இலங்கை பெரிய ஸ்கோரை தவறவிட்டது.
பந்துவீச்சில் பென் லிஸ்டர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
183 ஓட்டங்கள் என்ற வெற்றியலக்தை விரட்டிய நியூசிலாந்திற்கு, டிம் சீஃபர்ட் சரவெடி தொடக்கம் கொடுத்தார். 2வது போட்டியையும் இலங்கையிடமிருந்து அவரே பறித்தார். இன்றும் அவர்தான் இலங்கைக்கு வில்லன்.
48 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார்.
16.1 ஓவரில் நியூசிலாந்து 153 ஓட்டங்களை பெற்றிருந்த போது, சீஃபர்ட் 3வது விக்கெட்டாக வீழ்ந்தார்.
அப்போது, கைவசம் 7 விக்கெட் இருக்க, வெற்றிக்கு 23 பந்துகளில் 29 ஓட்டங்கள் தேவை. நியூசிலாந்து சுலபமாக வெற்றிபெறும் என்ற நிலையிருந்தது.
அப்பொழுதுதான் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களிற்கு “ஏதோ நடந்து“ நியூசிலாந்தை கலங்க வைக்கும் விதமாக பந்து வீசினர். டெத் ஓவர்கள் இலங்கையை போட்டிக்குள் கொண்டு வந்தது.
கற்பனை செய்திருக்க மாட்டார். 23 பந்துகளில் ஏழு விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.
17 முதல் 19 ஓவர்கள் வெறும் 19 ஓட்டங்களே விட்டுக் கொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றி பெற பத்து ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்சருக்கு விராட்டினார் ஷப்மன். அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்து அகலமான யோர்க்கர். மறுமுனையிலிருந்த மிட்செல் ஆட்டமுனைக்கு ஓடிவந்து விட்டார். நீஷம், பந்துவீச்சு முனைக்கு ஓட, விக்கெட் கீப்பர் பந்தை, லஹிரு குமாரவிடம் வீசினார். ஆட்டமிழப்பு. அகலப்பந்தாக நியூசிலாந்திற்கு 1 ஓட்டம் கிடைத்தது.
அடுத்த பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் மீண்டுமொரு ரன் அவுட் வாய்ப்பை லஹிரு குமார தவறவிட்டார். 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றியீட்டியது. 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை பெற்றது.
மகேஷ் தீக்ஷன 22 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்.பிரமோத் மதுஷங்க 38 ஓட்டங்களிற்கு 1 விக்கெட். ஹசரங்க நல்ல சாத்துப்படி வாங்கினார். 4 ஓவர்களில் 41 ஓட்டங்கள், விக்கெட் இல்லை.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் டிம் சீஃபர்ட் .