அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது ஏப்ரல் 20 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து கடந்த 28ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதிகள், ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது ஏப்ரல் 20 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.