உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகவேகமாக 1 மில்லியன் (10 லட்சம்) பின்தொடர்பவர்களைப் பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வ கணக்கை நேற்று தொடங்கினார். அக்கவுண்டை தொடங்கியதும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு,‘‘ஹாய் நண்பா, நண்பிஸ்” என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் புகைப்படம் 24 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்றது. மேலும், 99 நிமிடத்தில் நடிகர் விஜய் 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். இதன்மூலம் உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகவேகமாக 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக அளவில் அதிகவேகமாக 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப்பெற்றவர் பட்டியலில் கொரியன் இசைக்குழுவான பிடிஎஸ் குழுவைச் சேர்ந்த வி எனப்படும் கிம் டேஹ்யுங் 43 நிமிடத்தில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 59 நிமிடத்தில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். விஜய் 99 நிமிடத்தில் 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் என்ற கணக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.6 மில்லியனை (46 லட்சம்) கடந்துள்ளது.