கல்வி அமைச்சின் (கல்வி தர அபிவிருத்தி மற்றும் கல்வி சீர்திருத்தங்கள்) மேலதிக செயலாளர் எச்.யு.பிரேமதிலக்கவின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் இடைநிலை வகுப்புகளுக்கு 17 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மாணவர்கள் 2018 மற்றும் 2021 க்கு இடையில் 2,3,4,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் கடிதங்கள் நேரடியாக அதிபருக்கு அனுப்பப்பட்டது. மேலதிக செயலாளரின் போலி கையொப்பத்துடன் கூடிய அனைத்து கடிதத் தலைப்புக்களும் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெற்றோரின் பல பதவிகள் மற்றும் முகவரிகள் போலியானவை எனவும் மாகாண கல்வி அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக கல்விச் செயலாளரின் போலிக் கையொப்பத்தைப் பயன்படுத்தி உள்வாங்கப்பட்ட 17 சிறுவர்கள் தவிர, குறித்த காலப்பகுதியில் சுற்றறிக்கைகளுக்கு மாறாக 180 சிறுவர்கள் பாடசாலையின் இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள எந்தவொரு பாடசாலைக்கும் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பில் தாம் கடிதம் எதனையும் அனுப்பவில்லை எனவும், புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தனது கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரேமதிலக்க எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கணக்காய்வு அறிக்கையின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண பிரதம செயலாளர், மாகாணக் கல்விப் பிரதம செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கண்டி பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.