கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 வீதியில் கரைச்சி பிரதேச
சபையால் 27 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பசுமை நகரத் திட்டம்
வேலைத்திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் கரைச்சி
பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரிய
தகவல்களுக்கு அமைய வழங்கப்பட்ட தகவல்கள் பொது மக்களின் சந்தேகத்தை மேலும்
அதிகரித்துள்ளது.
சுமார் 50 மீற்றர் நீளமும்,20 மீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பில்
வைத்தியசாலைக்கும் ஏ9 வீதிக்கும் இடைப்பட்ட வீதியில் மண் பரப்பபட்டு
சுற்றி இரண்டு வரியில் கல் அடுக்கப்பட்டு புல் பதிக்கப்பட்டுள்ளதோடு, சில
மரக்கன்றுகளும் நாட்டப்பட்ட அவற்றுக்கு கூடுகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்காக கரைச்சி பிரதேச சபையால் 27 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு
பதிலளிக்கப்பட்டுள்ளது.
UNDP நிதி 20 இலட்சமும், கரைச்சி பிரதேச சபை நிதி 7 இலட்சமுமாக 27
இலட்சத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை
கிளிநொச்சி விநாயகபுரம் விடிவெள்ளி சனசமூக நிலையம் மேற்கொண்டுள்ளது.
ஒப்பந்த காலம் -02.11.2022 ஆரம்பித்து 20.03.2023 நிறைவுபெற்றுள்ளது என
தகவல் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் குறித்த வேலைத்திட்டத்திற்கு இந்தளவு நிதி தேவையில்லை எனவும் இந்த
வேலைத்திட்டத்தல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கும் பொது
மக்கள் இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு
தெளிவுப்படுத்த வேண்டும் என்றும். அத்தோடு ஊழல் முறைகேடுகள்
இடம்பெற்றிருப்பின் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.