இலங்கை- நியூசிலாந்து அணிகளிற்கிடையிலான முதலாவது ரி20 போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை இன்னிஸ்ஸை தூக்கி நிறுத்திய சரித் அசலங்கவின் அரைச்சதம், சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை கட்டுப்படுத்திய மகேஷ் தீக்ஷனவின் பந்து வீச்சின் மூலம் இலங்கை இந்த போட்டியில் வெற்றியீட்டியது.
ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை முதலில் ஆடி 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் என்ற சவாலான நிலையை எட்டியது. நியூசிலாந்து இலக்கை விரட்டிய போது, இஷ் சோதியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.
முன்னதாக இலங்கை அணி துடுப்பபெடுத்தாடிய போது, சரித் அசலங்க 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பிய குசல் பெரேரா, 45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இது ரி20 போட்டிகளில் அவரது 13வது அரை சதம். இலங்கை சார்பில் ரி20 போட்டிகளில் அதிக அரைச்சதம் பெற்றவர் என்ற சானையை, திலகரத்ன டில்ஷானுடன் சமன் செய்துள்ளார்.
ஈடன் பார்க் மைதானம் குறுகிய பௌண்டரி எல்லைகளை கொண்டிருந்ததால், இரு அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட்டன.
பதும் நிஸங்கவிற்கு நியூசிலாந்து தொடர் ஒரு கெட்ட கனவாகவே தொடர்கிறது. ரி20 போட்டிகளிலும் சொதப்புகிறார். இன்று தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 9 பந்துகளில் 25 ரன்களைக் அடித்தார். அதில் 24 ரன்கள் பவுண்டரிகளில் வந்தன. இலங்கை 3.2 ஓவர்களில் 47 ரன்களை எட்டிய போது மென்டிஸ் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்த, பெரேராவும் அசலங்கவும் வேகமான ரன் குவிப்பை தொடர்ந்தனர்.
பவர்பிளேக்குள் இலங்கை மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஸ்கோர் விகிதம் குறையவில்லை. மெண்டிஸின் ஆரம்பத் தாக்குதலைத் தொடர்ந்து, தனஞ்சய டி சில்வா 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பெரேரா ஆரம்பத்தில் ஆக்ரோசம் காட்டினாலும், பின்னர் அசலங்கவை அடிக்க விட்டு, மறுமுனையில் பொறுமையாக ஆடினார்.
அசலங்க 41 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களை குவித்தார்.
அசலங்கா வெளியேறிய பிறகு இலங்கை 17 முதல் 19 ஓவர்கள் வரை 11 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெரேரா 53 ரன்களுடனும், ஹசரங்க 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்ததுஇ.
நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீசம் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
நியூசிலாந்து இலக்கை விரட்டிய போது, சில ஆரம்ப விக்கெட்டுகள் இருந்தபோதிலும், டேரில் மிட்செல், 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில், ரொம் லாதம் ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது உறுதிசெய்து தேவையான விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த ஜோடி 39 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தது. லாதம் வீழ்ந்த பிறகு, மிட்செல் தொடர்ந்தார், மார்க் சாப்மேனுடன் 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். மதுஷங்கவின் 12வது ஓவரில் 24 ரன்களை விளாசினர். இந்த ஓவர்தான் ஆட்டத்தை மாற்றியமைத்தது..
இறுதி ஓவரை வீசிய ஷனக கட்டுக்கோப்பாக வீசி 12 ரன்களை கொடுத்தார். முதல் பந்தில் ரவீந்திரவை வெளியேற்றினார். அவர் 13 பந்துகளில் 26 ரன்களுடன் முரட்டு ஃபோர்மில் இருந்தார். இறுதிப்பந்தில் இஷ் சோதி சிக்சர் அடிக்க ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து ஆடியது. 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்களை எடுத்தது. பந்துவீசியர் மகேஷ் தீக்ஷன.
இலங்கை 3 பந்துகளில் இலக்கை எட்டியது.
ஆட்டநாயகன் அசலங்க.