கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது, பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. வன்முறைக் கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த 5 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரௌடிகள் 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (30) மாலை நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில்- பாடசாலை கீதம் இசைக்கப்பட்ட போது, மைதானத்துக்குள் குழப்பம் ஏற்பட்டது.
ரௌடிக்கும்பல் ஒன்று மைதானத்துக்குள் புகுந்து குழப்பத்தில் ஈடுபட்டது. பாடசாலை பழைய மாணவன் ஒருவரின் கழுத்தை நெரித்து, தாக்கியதால் குழப்பம் ஆரம்பித்தது.
தாக்குதலை தடுக்க முற்பட்ட ஏனைய பழைய மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சாந்தபுரம் பகுதியை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றே இந்த வன்முறையில் ஈடுபட்டது. 6 பேர் கொண்ட இந்த குற்றக்கும்பலில் உள்ள பலர், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி விளக்கமறியலில் இருந்தனர். அவர்கள் சில நாட்களின் முன்னரே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர, இந்த ஆறு பேரும் நீண்டகாலமாக இந்த பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். களவு, வன்முறை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர்கள் பலமுறை கிராம மக்களால் பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுமுள்ளனர்.
நேற்று அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அங்கிருந்தவர்களால் கூட்டாக பாடசாலை மைதானத்திற்கு வெளியில் அனுப்பப்பட்டனர்.
எனினும், சற்று நேரத்தில் பாடாசலையின் பின் வேலி கடந்து நுழைந்து, பழைய மாணவர்கள் மீது கொட்டான்களால் அடித்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என சகலரையும் அடித்தனர்.
பழைய மாணவர் ஒருவரை தாக்கிய போது, பாடசாலை மாணவியான அவரது தங்கையார் காப்பாற்ற சென்ற போது, அவரும் தாக்கப்பட்டு மயக்கமடைந்தார்.
மாணவி, மாணவன் ஒருவரின் தந்தை, பழைய மாணவர்கள் மூவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரால் 4 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இருவர் தப்பியோடி விட்டனர்.
பாடசாலைக்கு அண்மையில் கசிப்பு விற்கப்படும் இடமொன்றுள்ளது. அங்கு கசிப்பு அருந்தி விட்டே ரௌடிகள் பாடசாலை மெய்வல்லுனர் போட்டிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு அண்மையில் கசிப்பு விற்பவரை, பாடசாலை பழைய மாணவர்கள் சில முறை எச்சரித்துள்ளனர். அப்படி எச்சரிக்கை விடுத்த பழைய மாணவர்களே ரௌடிகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.