திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியது உள்ளிட்ட சித்ரவதை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை மீதான நடவடிக்கையாக, ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரை, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சினையை செய்ததாக போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரது பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கி எடுத்தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இளைஞர்களின் பற்களை உடைத்ததுடன், அவர்களது வாயில் ஜல்லி கற்களை போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் கூறும்போது, “அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு தவறுகளை செய்யும் இளைஞர்கள் 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களது பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்ட போலீஸார் பிடுங்கியுள்ளனர். காவல் நிலையங்களில் தவறு செய்தால் கை கால்களை உடைப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பற்களை பிடுங்கி எடுப்பது இப்போதுதான் முதல் முறையாக நடைபெறுவது தெரியவந்துள்ளது.
பற்களைப் பிடுங்கி வருவது பலரின் உயிருக்கு ஆபத்தாக உள்ளது. பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட 3 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கூட சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் அவர் மீது மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும் அவர் மீது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த சர்ச்சையை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டனர்.
இதனிடையே, இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உரிய புகார்கள் வரப்பெற்றதும் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துறை தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.