தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் சில தகவல்களைக் கோரும் போது, தகவல் வழங்காவிட்டால் அது குற்றமாகும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் அமைச்சின் தகவல் அதிகாரி வி.டி.எஸ்.சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை நேற்று முன்தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் தரம் தொடர்பில் உரிய அறிக்கைகளை வழங்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், வழக்கை தீர்த்து வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமாலி குலரத்ன, முறைப்பாட்டாளரால் கோரப்பட்ட ஆவணங்கள் பிரதிவாதிகளால் முறைப்பாட்டாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் அந்த ஆவணங்கள் முறைப்பாட்டாளரால் பெறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதிவாதிகள் வழங்கிய தகவல்களை அவர்கள் இன்னும் சோதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலதிக விசாரணைகளை மே 2ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.