பெண் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பொருட்களிற்குரிய பணத்தை செலுத்தாத காரணத்தினால், அவரது 17 வயது மகனை கடத்திச் சென்ற ஜவுளி விநியோகஸ்தர் ஒருவரைக் கண்டுபிடிக்க கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1.2 மில்லியன் ரூபா பணம் செலுத்தும் வரை மகனை விடுவிக்கப் போவதில்லை என சந்தேக நபர், வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளார்.
கண்டியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன், கண்டி பேராதனை வீதியில் தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சந்தேக நபர் வானில் வந்து கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹந்தான பிரதேசத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர், விநியோகஸ்தரிடமிருந்து வாங்கிய ஜவுளிகளுக்கு 1.2 மில்லியன் ரூபா செலுத்தத் தவறியதை அடுத்து, வர்த்தகரின் மகனைக் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் தாயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியதுடன், மாணவனை உடனடியாக பொலிஸாரிடம் கொண்டு வருமாறு அவருக்கு அறிவித்துள்ளனர்.
கடுகன்னாவையில் உள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவன், சந்தேக நபரால் பயணிகள் பேருந்தில் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தன்னை கடத்தியவர் எவ்வகையிலும் தனக்கு தீங்கு செய்யவில்லை என மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.