அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.
இந்த தொடரின் முடிவில் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார்லோஸ் அல்கராஸ் ஓர் இடம் முன்னேறி 7,420 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்தியன் வெல்ஸ் தொடரில் விளையாடாததால் முதலிடத்தை இழந்துள்ளார். அவர் 7,160 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேவேளையில் காயம் காரணமாக அவுஸ்திரேலிய ஓபனில் 2வது சுற்றுடன் வெளியேறிய ஸ்பெயினின் ரபேல் நடால் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 18 வருடங்களில் ரபேல் நடால் ரொப் 10இல் இடம் பெறாமல் இருப்பது இதுவே முதன்முறை.
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), காஸ்பர் ரூட் (நோர்வே), டேனியல் மேத்வதேவ் ( ரஷ்யா), பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷ்யா), ஹோல்கர் ரூன் (டென்மார்க்), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் முறையே 3 முதல் 10வது இடங்களில் உள்ளனர்.