இலங்கை அணி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதை போல, நியூசிலாந்திடம் வைட் வோஷ் ஆவதை தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்றும் முழுதாக 2 நாட்கள் எஞ்சியிருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை இன்னும் 303 ஓட்டங்களை பெற வேண்டும். இன்றைய 3வது நாள் முடிவில் இலங்கையின் ஸ்கோர் 113/2.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. இதனால் பொலோ ஓன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடுகிறது.
தற்போது கிரீஸில் குசல் மெண்டிஸ் 50 ரன்களுடனும், அஞ்சலோ மத்யூஸ் 1 ரன்னுடன் இருந்தனர்.
இலங்கைக்கு இப்போதுள்ள கடைசி நம்பிக்கை, 2018 ஆம் ஆண்டு இதே மைதானத்தில்? இப்படியான நெருக்கடியில் இலங்கை சிக்கிய போது, குசல் மெண்டிஸ்- அஞ்சலோ மத்யூஸ் ஜோடிதான் அசாதாரண ஆட்டத்தை ஆடி காப்பாற்றியது. அவர்கள் இருவரும் 4வது நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடினர். ஐந்தாவது நாளில் மழையும் பெய்து உதவ, ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இம்முறையும், மழைக்கான முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளை மழை பெய்யுமா என்பது தெரியாது.
முதல் இன்னிங்ஸை போல இலங்கை கத்துக்குட்டி தனமாக ஆடினால், வர்ண பகவான் கூட இலங்கையை காப்பாற்ற முடியாதென்பதே உண்மை
3வது நாளில் இலங்கை 10 விக்கெட்டுக்களை இழந்தது.
நேற்றைய 2ஆம் நாள் முடிவில் 26/2 என தத்தளித்த இலங்கை, இன்று 164 ஓட்டங்களிற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மட்டும் தனியொருவராக போராடி, 89 ரன்களை அடித்தார். தினேஷ் சந்திமால் 37, விக்கெட் கீப்பர் நிஷான் மதுசங்க 19, உதிரி ஓட்டங்கள் 7 பெறப்பட்டது. நியூசிலாந்து வழங்கிய உதிரி ஓட்டங்கள்தான் இலங்கையின் 4வது அதிகூடிய ஓட்டம். 8 வீரர்கள் ஒற்றையிலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். அதில் நால்வர் டக்.
மதிய உணவுக்கும் தேநீருக்கும் இடைப்பட்ட நேரத்தில் வெறும் 55 ரன்களுக்கு இறுதி ஆறு விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி ஆடும் அணி அந்த போட்டியை வெல்வது அல்லது சமனிலையாக்குவதெல்லாம் சாத்தியமேயில்லாத விடயங்கள்.
பந்துவீச்சில் மட் ஹென்ரி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
416 ரன்கள் முன்னிலையிலிருந்த நியூசிலாந்து, பொலோ ஓன் முறையில் இலங்கையை மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இரண்டாவது இன்னிஸ்சிலும் தொடக்க வீரர் ஓஷத பெர்னாண்டோ 5 ரன்களில் நடையை கட்டினார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள். முதலாவது டெஸ்டில் 13,28 ரன்கள் அடித்திருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரத்ன கொஞ்சம் வேகமாக ஆடினார். அணியின் சீத்துவம் தெரிந்தோ என்னவோ அவரே பந்துகளை எதிர்கொள்ள முயன்றார். 61.44 என்ற ஸ்ரைக்ரேட்டில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவர் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் நிலைத்து நின்றிருக்கலாம்.
தற்போது குஷல் மென்டிஸ் 50, அஞ்சலோ மத்யூஸ் 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.