சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் வீதியில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து, இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களை சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் எரத்ன மற்றும் ஸ்ரீ பாலபத்தல வீதியில் உள்ள பெருமாண்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 53 வயதுடைய எரத்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் லிஸ்டீரியாவால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிவனொளிபாத மலை செல்லும் வீதியில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களையும் ஆய்வு செய்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
இந்த இடங்களில் உள்ள உணவு மாதிரிகளை உடனடியாக பெற்று, அவற்றை பரிசோதனைக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த உணவகத்தில் பணியாற்றிய பெண்ணின் திடீர் மரணம் தொடர்பில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பக்டீரியா தொற்று காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுண்ணுயிரியல் சோதனைகள் இந்த பக்டீரியாவை லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாத மலை யாத்திரை சென்ற மற்றுமொரு நபரும் சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களது பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இந்த பகுதியில் உணவு உட்கொண்டதால் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
Listeria Monocytogenes hkq என்பது கிராம்-பொசிட்டிவ் பக்டீரியாவின் ஒரு இனமாகும். இது பொதுவாக மண்ணிலும், வெளிப்புற சூழலில் அழுகிய சேறுகளிலும் காணப்படுவதாக டொக்டர் நெலும் தசநாயக்க தெரிவித்தார்.
உறைந்த உணவுகள், பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால், பாலாடைக்கட்டி, தொத்திறைச்சி போன்றவற்றின் மூலம் மக்கள் இந்த பக்டீரியாவை உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. சாதாரண உடல்நிலை உள்ளவர்களுக்கு இந்த நோய் அரிதாகவே ஆபத்தானது என்று மருத்துவர் சுட்டிக்காட்டினார், ஆனால் முதியவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த பக்டீரியாவால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
இந்த பக்டீரியா மூளைக்காய்ச்சல் மற்றும் பக்டீரிமியா காரணமாக மரணம் கூட ஏற்படலாம் என்று சுகாதார துறைகள் குறிப்பிடுகின்றன. உணவின் மூலம் உட்கொள்ளப்படும் இந்த பக்டீரியா, குடல் சுவர்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்து மூளைக்குச் சென்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
நஞ்சுக்கொடியில் நோய்த்தொற்று ஏற்படுவதோடு, கருவுக்கும் பயணிக்கக் கூடும் என்பதால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்த பக்டீரியா தொற்று ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறைகளால் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாந்தி, முதுகு வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சல் மற்றும் மயக்கம் இருந்தால், நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.