களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் நேற்று (16) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் டபிள்யூ.கே.திலக் வரகொட மற்றும் ஷெனால் அமித் வெல்கம ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் போதே, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால தடை அமலில் இருக்கும்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக களுத்துறை பிரதேச சபைக்கு புதிய இலங்கை சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுவை, சமாதான நீதவான் முத்திரை இடப்படவில்லை எனக் கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்திருந்தார்.
தேர்தல் அதிகாரியின் முடிவை செல்லாது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விரான் கொரியா, இந்த வேட்புமனுவில் சமாதான நீதவானின் உத்தியோகபூர்வ முத்திரை இடப்படாவிட்டாலும் ஆவணங்களில் உரிய முறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப விடயங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு வேட்புமனுக்களை மதிப்பீடு செய்வது சட்டத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி தர்ஷன வெரதுவ ஆஜரானார்.