மத்திய மத்தியதரைக் கடலில் பயணித்த அகதிகள் படகொன்று மோசமான வானிலையால் கவிழ்ந்ததில் 17 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகே விபத்திற்குள்ளானது.
வணிகக் கப்பல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை ஏஜென்சியான ஃபிரான்டெக்ஸின் வான்வழி ஆதரவுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, அதே நேரத்தில் மேலும் இரண்டு வணிகக் கப்பல்கள் அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தன என்று கடலோர காவல்படை ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, மெடிட்டரேனியா சேவிங் ஹியூமன்ஸ் தொண்டு நிறுவனம் பல ஆதாரங்களின்படி, இத்தாலியின் திசையில் பயணித்த கப்பல் பெங்காசிக்கு வடமேற்கே 177 கிமீ (110 மைல்) தொலைவில் கவிழ்ந்ததாக ட்வீட் செய்திருந்தது.
47 அகதிகளுடன் புறப்பட்ட இந்த படகு ஆபத்தில் சிக்கியதும், படகிலிருந்தவர்கள் தொண்டு நிறுவனங்களிடம் உதவி கோரினர்.
அலாரம் ஃபோன் என்ற தொண்டு நிறுவனம் சனிக்கிழமை அந்த அகதிகள் படகை பற்றி ருவிற்றரில் குறிப்பிட்டு, லிபியா மற்றும் இத்தாலி அரசுகள் விரைந்து காப்பாற்ற வேண்டுமென கோரியது.
மோசமான வானிலை காரணமாக வணிகக் கப்பலின் ஆரம்ப மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, லிபிய அதிகாரிகள் ரோமிடம் உதவி கேட்டனர். எனினும், இத்தாலி எல்லைக்கு வெளியில் விபத்து நிகழ்ந்ததால், அந்த பகுதியிலிருந்த வணிக்கக் கப்பல்களின் உதவியை கோரியதாக இத்தாலியின் தேடுதல் மற்றும் மீட்புக் குழு தெரிவித்தது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலை “FROLAND” வணிகக் கப்பலில் அகதிகளை ஏற்றும் முயற்சியின் போது அகதிகள் படகு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 26 அன்று இத்தாலியின் கலாப்ரியாவின் தெற்குப் பகுதிக்கு அருகே கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, கடலில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை மீட்பதற்கான இத்தாலியின் திறன்கள் பற்றிய கேள்வி எழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது 79 பேர் இறந்தனர்.
பயணிகளைக் காப்பாற்ற சரியான நேரத்தில் தலையிடத் தவறியதாக கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு இத்தாலியின் அரசாங்கம் பின்னடைவை எதிர்கொள்கிறது.
முன்னதாக, சனிக்கிழமையன்று, இத்தாலியின் தெற்கு முனையிலிருந்து மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் 1,300 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 200 பேர் சிசிலிக்கு அப்பால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினர்.
இதேவேளை, லிபியாவிலிருந்து படையெடுக்கும் அகதிகள் படகுகள் சில இத்தாலிக்கு அண்மைய கடலில் காணப்படுவதாகவும், அவற்றை லிபியாவிடம் ஒப்படைக்க இத்தாலி முயல்வதாகவும் அலாரம் ஃபோன் தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
லிபிய கடலோர காவல்படை கப்பல்கள் வந்து, அகதிகளை திருப்ப- கட்டாயமாக அழைத்துச் செல்லும் வரை, இத்தாலி அவர்களை கடலில் தடுத்து வைத்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.