சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கிணங்க- பொதுமக்கள் மீது அசாதாரண சுமையை ஏற்படுத்தியுள்ள-புதிய வரிக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
அதிபர், ஆசிரியர், சுகாதாரம், பொது நிர்வாக சேவைகள் உள்ளடங்களாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
அன்றைய தினம், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி பாதுகாப்பின்மைக்கு உட்படுத்த வேண்டாமென அதிபர்கள் தொழிற்சங்கம், பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அன்று முழுமையாக கல்விச் செயற்பாடுகள் இடம்பெறாது என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல, சமுர்த்தி, பிரதேச செயலகம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய ஊழியர்களும் முழுமையான பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அன்றையதினம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் முழுமையான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது. புற்றுநோய், அவசர சத்திரசிகிச்சைகள், சிறுவர் வைத்தியசாலைகளில் சிகிச்சை நடைபெறுமென்றும், ஏனைய சேவைகள் நிறுத்தப்படுமென்றும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்றும் (13), நாளையும் மாகாணங்கள் ரீதியிலான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
இதேவேளை, ஏனைய பல மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அவசர சேவைகள் பாதிக்கப்படாது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இந்த வேலைநிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.
தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.