சனிக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயிலின் மலசலகூடத்தில் கைக்குழந்தையைக் கைவிட்டுச் சென்றமை தொடர்பில் தாயும் தந்தையும் பண்டாரவளையில் இரண்டு இடங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இரவு தபால் ரயிலின் கழிவறைக்குள் சிசு ஒன்று இருப்பதாக ரயில் பயணிகளிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை புகையிரத நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது கூடைக்குள் இருந்து இந்த சிசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிசுவை பொலிசார் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட இரண்டு வாரங்களே ஆன சிசுவிற்கு வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்களே உணவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், கைவிடப்பட்ட சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவுக்கு மார்ச் 11ஆம் திகதி காலை இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பண்டாரவளை பொலிசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 25 வயதுடைய அந்தப் பெண் உண்மையில் குழந்தையின் தாய் என்பதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் காவலில் வைக்கப்பட்டார்.
இவர் ராஜகிரியவில் உள்ள தோழி ஒருவரின் வீட்டில் கேக் தயாரிக்க உதவி செய்து வந்ததாகவும், காதல் விவகாரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து தனது ஆண் நண்பரிடம் கூறியபோது, இருவரும் வாடகை அறையில் ஒன்றாக வசித்து வந்தனர்
ஒரு வருடத்தை நெருங்கிய நிலையில், பெப்ரவரி 25 ஆம் திகதி தான் பிரசவித்ததாகவும், பின்னர் குழந்தையை தனது காதலனான குழந்தையின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு பஸ்ஸில் பண்டாரவளைக்கு புறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொஸ்லந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில், குழந்தையின் தந்தை என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய இளைஞனை அன்றைய தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் தனியார் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமக்கு திருமணம் ஆகாததால், குழந்தை பிறந்த விவகாரத்தை தனது பெற்றோரிடம் தெரிவிக்க காதலி விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில் வைத்தால், யாராவது குழந்தையை எடுத்துச் சென்று கவனித்து வளர்த்து விடுவார்கள் என்று தாம் நம்பியதாகவும், அதன்படி ரயிலில் குழந்தையை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், காதலியையும் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தான் ஒன்லைன் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், குழந்தையை போட பயன்படுத்திய பிளாஸ்டிக் கூடையை ஒன்லைனில் வாங்கியதாகவும் தந்தை பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஜோடி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.