யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் தெரிவு இன்று (10) நடைபெறவில்லை. சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாததால், முதல்வர் தெரிவை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஒத்திவைத்தார்.
இதன்மூலம், தற்போதைய யாழ்ப்பாணம் மாநகரசபையின் பதவிக்காலம், புதிய முதல்வர் தெரிவு செய்யப்படாமலே நிறைவடையும் நிலைமையேற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவு இன்று நடைபெறுமென வடமாகாண உள்ளூராட்சி அணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார். இன்று காலை 10 மணிக்கு, புதிய முதல்வர் தெரிவிற்காக அவர் யாழ் மாநகரசபைக்கு வந்த போதும், கூட்டத்தை நடத்த போதுமான உறுப்பினர்கள் சபைக்கு வராததால், முதல்வர் தெரிவை ஒத்திவைத்தார்.
இன்று கூட்டம் ஆரம்பித்த போது 19 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐ.தே.க, தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சமூகமளித்தனர்.
இதையடுத்து, 30 நிமிடங்களிற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.
மீண்டும் சபை கூடியபோதும், உறுப்பினர்கள் சமூகமளிக்காததால், முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் தெரிவுக்கான பிரிறிதொரு திகதி பின்னர் அறிவிக்கப்படுமென உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சொலமன் சிறில் இன்று முதல்வராக போட்டியிடுவார் என, அந்த கட்சி அறிவித்திருந்தது.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளர்களை ஏனைய கட்சிகள் அங்கீகரிக்க தயாராக இல்லாததால், இன்றைய சபை அமர்வை திட்டமிட்டு தவிர்த்தனர். ஏனைய கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்காவிட்டால், சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்காது என்ற அடிப்படையில், கூட்டத்திற்கு சமூகமளிப்பதை தவிர்த்திருந்தனர்.
யாழ் மாநகரசபையின் முதல்வர் விவகாரத்தில் கடந்த சில காலமாகவே இழுபறி நிலவுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சி தலைமை போட்டியின் விளைவாக, அப்போதைய முதல்வர் ஆனோல்ட்டை, தமிழ் அரசு கட்சியினரே கவிழ்த்தனர். இதன் பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு யாழ் மாநகரசபை முதல்வர் பதவி எட்டாக்கனியாகவே இருக்கிறது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை தமிழ் அரசு கட்சி எடுத்திருக்காமல் விட்டிருந்தால், தற்போதைய நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது. கூட்டத்தை நடத்த போதிய உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றிருக்கும். இதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாநகரசபையை கைப்பற்றியிருக்கும்.
எனினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக, தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதென எடுத்த முடிவால், இலங்கை தமிழ் அரசு கட்சியும் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.